சபாநாயகர் கைது செய்யப்பட வேண்டும்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்துக்கு மதிப்பளிக்காமல் செயற்பட்டு நாட்டின் இறைமையை பாதிக்கும் வகையில் செயற்பட்ட சபாநாயகர் கரு ஜெயசூரியவை கைது செய்து, அவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்தார்.


நுவரெலியா மாவட்டத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,

“சபாநாயகரின் செயற்பாடுகள் நாடாளுமன்றத்தில் இதுவரை காலமும் பேணப்பட்டு வந்த மரபுகள், சட்ட ரீதியான நடவடிக்கைகள் ஆகியவற்றை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

மேலும் நாட்டின் இறைமையை பாதுகாக்க வேண்டிய சபாநாகர், தமது பொறுப்புகளில் இருந்து தவறியமையால் இலங்கை அரசியலில் பாரிய சிக்கல்கள் தோன்றியுள்ளன.

இதேவேளை இதற்கு முற்பட்ட சபாநாயகர்கள், ஜனாதிபதியின் தீர்மானத்திற்கு மதிப்பளித்து செயற்பட்டே வந்தனர். அதனால் நாட்டிலும் இவ்வாறான பிரச்சினைகள் தோன்றவில்லை.

ஆனால், தற்போது சபாநாயகர் கரு ஜெயசூரிய, ஜனாதிபதியின் பேச்சுக்கு மதிப்பளிக்காமல் செயற்பட்டு நாட்டில் அபகீர்த்தியை ஏற்படுத்தியமையால் அவரை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்” என பெரியசாமி பிரதீபன் வலியுறுத்தியுள்ளார்.

No comments

Powered by Blogger.