வவுனியாவில் ஐ.தே.க.வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக ஆர்ப்பாட்டமொன்று இன்று (திங்கட்கிழமை) வவுனியாவில் நடைபெற்றுள்ளது.



வவுனியா பழைய பேருந்த நிலையத்திற்கு முன்பு பொதுஜன பெரமுனவின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுள்ளது.

இதன்போது ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டோர் கூறுகையில், “இலங்கையில் தற்போது பாரிய அரசியல் நகர்வொன்று இடம்பெற்றுக்கொண்டு இருக்கின்றது. இதன் காரணமாக நாடு தழுவிய ரீதியில் ஆர்ப்பாட்டங்கள் பல இடம்பெறுகின்றன.

ஆகையால், இத்தகைய சூழ்நிலையில் தேர்தலை நடத்துவதே சிறந்ததென்ற கருத்தை வலியுறுத்தும் வகையில் மூவின மக்களும் இணைந்து இவ்வார்ப்பாட்டத்தை மேற்கொண்டுள்ளோம்.

அத்துடன் நாடு பொருளாதார ரீதியில் பாரிய வீழ்ச்சியை எதிர் நோக்கியுள்ள நிலையிலேயே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமித்தார். ஆனால் குறித்த நல்ல செயற்பாடு பாரதூரமாக தற்போது போய்க்கொண்டு இருக்கின்றது” என குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, ‘வேண்டும் வேண்டும் தேர்தல் வேண்டும்’, ‘ஐக்கிய தேசிய கட்சியினரே இதுவரை ஏமாற்றியது போதும் இனியும் வேண்டாம்’, ‘இலங்கையின் இறையான்மைக்கு எதிராக செயற்படும் சபாநாயகர் பதவி விலகு’, ‘அரச உடைமைகளை விற்று நாட்டை சூறையாடுகின்ற ஐக்கிய தேசியக்கட்சியினை தேர்தலில் தோற்கடிப்போம்’ போன்ற வாசகங்களை ஏந்தியவாறும் கோசங்களை எழுப்பியவாறும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.ரஞ்சித், முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் தர்மபால செனவிரத்தின, வவுனியா தெற்கு சிங்கள பிரதேசசபை தலைவர், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.