மலையகத்தில் இருவேறு ஆர்ப்பாட்டங்கள்!

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவாகவும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவாகவும் மலையகத்தில் இருவேறு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன.


நாட்டில் ஆட்சி அமைப்பதற்கான அதிகாரம் ஐக்கிய தேசிய கட்சிக்கே உள்ளதென தெரிவித்து நேற்று, (ஞாயிற்றுக்கிழமை) நுவரெலியாவில் ஐக்கிய தேசிய கட்சியினால் ஆர்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

ஐக்கிய தேசிய கட்சியின் பெரும்பான்மை பலத்தை எடுத்துணர்த்தும் வகையில் இவ்வார்ப்பாட்டம் இடம்பெற்றது.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், அரசியலமைப்பை மீறி ஜனாதிபதி செயற்பட்டதாகவும், அரசாங்கத்திற்கு நாடாளுமன்றில் பெரும்பான்மை இல்லை எனவும் கோஷமிட்டனர்.

அதனைத் தொடர்ந்து கோஷங்களை எழுப்பியவாறு நுவரெலியா நகர சுற்றுவட்டத்திலிருந்து, தபால் நிலையம் வரை பேரணியாக சென்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கு கூடி தமது எதிர்ப்பை வெளியிட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நவீன் திஸாநாயக்க, கே.கே.பியதாஸ, நுவரெலியா மாநகர சபை தலைவர், ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களென பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டனர்.

இதேவேளை, நாடாளுமன்றத் தேர்தலை உடனடியாக நடத்தக் கோரி, நுவரெலியாவில் நேற்று மாலை மற்றுமொரு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டுள்ளது.

நுவரெலியா- ராகல நகரில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தினை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது, நாடாளுமன்றத் தேர்தலை நடத்தக்கோரி, பேரணியாகச் சென்றவர்கள் கையழுத்து வேட்டையிலும் ஈடுபட்டனர்.

மேலும் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க தலைமையில் நடைபெற்ற குறித்த ஆர்ப்பாட்டத்தில், ஐக்கிய தேசிய முன்னணிக்கு எதிரான வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர்.

அத்துடன் சபாநாயகரின் உருவப் பொம்மையினை ஏந்தியிருந்த அவர்கள் அதற்கு தீயிட்டு தங்கள் எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது
Powered by Blogger.