டெல்லியை குலுக்கும் விவசாயிகள் பேரணி

விவசாய கடன் ரத்து, விளைபொருட்களுக்கு லாபகரமான விலை, விவசாயிகளுக்கு முறையான ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை விவசாயிகள் நீண்ட காலமாக வற்புறுத்தி வருகிறார்கள். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசை வலியுறுத்தி டெல்லியில் நவம்பர் 29 ஆம் தேதி தொடங்கி 2 நாட்கள் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் என்று அகில இந்திய விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு அறிவித்து இருந்தது.


அதன் படி அனைத்து மாநில விவசாயிகள் கலந்துகொண்ட போராட்டம் நேற்றைய தினம் டெல்லியில் தொடங்கியது. இதில், குஜராத் மாநிலத்திலிருந்து மட்டும் சுமார் 50000க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்துகொண்டனர்.மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு தங்களுக்கு அளித்த வாக்குறுதியை மறந்துபோயுள்ளதாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை காப்பதை விடவும் இவர்களுக்கு கார்ப்பரேட் பெருநிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்பட வேண்டிய தேவை உள்ளதாகவும் மத்திய அரசை விமர்சிக்கின்றனர் போராட்டத்தில் கலந்துகொண்டுள்ள விவசாயிகள்.

இந்நிலையில், இன்று ராம்லீலா மைதானத்திலிருந்து நாடாளுமன்றம் நோக்கி விவசாயிகள் பேரணியாக சென்றனர். விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.

முன்னதாக, டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகள் போராட்டத்தில் தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் கலந்துகொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.