விக்ரமின் வலுவான ரீ என்ட்ரி!

மலையாள இயக்குநர் அன்வர் ரஷீத் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் விக்ரம் நடிக்கவுள்ளார்.


கவுதம் மேனன் இயக்கும் துருவ நட்சத்திரம், ராஜேஷ் எம்.செல்வா இயக்கும் படம் என நடித்து வரும் நடிகர் விக்ரம், அடுத்து வரலாற்றுப் படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை அன்வர் ரஷித் இயக்குகிறார்.

மலபார் கலகம் அல்லது மாப்பிள்ளை கலகம் என்று அழைக்கப்படும் வரலாற்றுக் கதையை அடிப்படையாகக் கொண்டு இப்படம் உருவாகுகிறது. கேரளாவில் மலபார் பகுதியில், பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக தொடங்கிய இந்த கலகம் பிறகு பெரும் இனக்கலவரமாக மாறியது. இதில் ஏராளமானோர் கொல்லப்பட்டனர். 1921ஆம் ஆண்டு நடந்த வரலாற்று சம்பவத்தை அன்வர் ரஷித் படமாக்குகிறார்.

இந்தக் கதையில் சுதந்திரப் போராட்ட வீரர், வரியன்குன்னத் குஞ்சாசமாகத் ஹாஜியாக விக்ரம் நடிக்கிறார். மலபார் கலகத்தின் நூற்றாண்டு விழாவை ஒட்டி 2021ஆம் ஆண்டு இந்த படத்தை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், நடிகர் விக்ரம் 18 வருடங்களுக்குப் பிறகு, மலையாள சினிமாவில் நுழைய உள்ளார்.

இதே சம்பவத்தை மையமாக வைத்து இயக்குநர் ஐ.வி.சசி 1988ஆம் ஆண்டு ‘1921’என்ற படத்தை இயக்கி இருந்தார். அதில் மம்மூட்டி ஹீரோவாக நடித்திருந்தார்.

இதே போன்றதொரு வரலாற்றுப் பின்னணியை மையமாகக் கொண்டு சமீபத்தில் வெளியான மலையாளப் படமான ‘காயம்குளம் கொச்சுன்னி’ நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.