நாயகன் அரியணை ஏறிய யோகி பாபு

காமெடி நடிகர்கள் கதாநாயகனாக நடிப்பது தமிழ் சினிமாவுக்கு புதிதல்ல. பல நடிகர்கள் அந்த பாதையில் சென்று சில வெற்றிகளைப் பதிவு செய்துள்ளனர். ஆனால் தொடர்ச்சியாக கதாநாயகனாக நடிக்க முற்பட்டுத் தோல்வியடைந்த

பட்டியலே இங்கு அதிகம். அதன்பின் காமெடி நடிகராக நடிக்கும் வாய்ப்பும் குறைந்துவிடுவதே யதார்த்தமாக இருக்கிறது. இதை உணர்ந்தே சில மாதங்களுக்கு முன் யோகி பாபு தான் கதாநாயகனாக நடிப்பதாக வரும் செய்திகள் உண்மையில்லை என்று தெரிவித்திருந்தார்.

கூர்கா படத்தின் டைட்டில் கேரக்டரில் அவர் நடிப்பது தொடர்பான அறிவிப்புகள் வெளியானது அப்படியான விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது. சாம் ஆண்டன் இயக்கும் அந்த படத்தில் யோகி பாபு உடன் கனடா நடிகை எலிஸ்ஸாவும் நடிக்கிறார். அந்த படத்தின் பணிகள் நடைபெற்றுவரும் நிலையில் தொடர்ந்து பல படங்களில் அவர் காமெடி கதாபாத்திரத்தில் நடித்துவருகிறார். சர்கார், விஸ்வாசம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் யோகி பாபுவின் பெயர் கட்டாயம் இடம்பெற்றுவிடுகிறது.

இந்நிலையில் அனிருத் வெளியிட்டுள்ள தர்மபிரபு படத்தின் போஸ்டர் மறுபடியும் யோகி பாபு கதாநாயகனாக நடிக்கிறார் என்ற விவாதத்தைத் தொடங்கிவைத்துள்ளது. முத்துகுமரன் இயக்கத்தில் அவர் நடிக்கும் தர்மபிரபு படத்தின் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. எமதர்ம ராஜா வேடத்தில் அரியணையில் யோகி பாபு அமர்ந்திருக்கும் படம் தான் போஸ்டரை அலங்கரித்துள்ளது. ‘யோகி பாபுவின் தர்மபிரபு’ என அனிருத் குறிப்பிட்டுள்ளது இந்த படத்தில் அவர் கதாநாயகனாக நடிப்பதை உறுதிசெய்துள்ளது.

மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். ராட்சசன் படத்திற்கு படத்தொகுப்பு செய்த ஷேன் லோகேஷ் இந்த படத்தில் இணைந்துள்ளார். ஸ்ரீவாரி பிலிம்ஸ் தயாரிக்கிறது.

No comments

Powered by Blogger.