பொருளாதாரத் தடையிலிருந்து விலக்கு!

நுகர்வு நாடுகளின் நலனைக் கருத்தில் கொண்டு அமெரிக்காவின் பொருளாதாரத் தடையிலிருந்து இந்தியாவுக்கு விலக்களிக்கப்பட்டுள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடை நவம்பர் 5ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. நவம்பர் 4ஆம் தேதிக்குள் ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை முற்றிலுமாகக் குறைக்கும்படி அனைத்து நாடுகளையும் அமெரிக்கா வலியுறுத்தியிருந்தது. உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக ஈரானிடமிருந்து அதிகளவில் எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடாக இந்தியா உள்ளது. இந்தப் பொருளாதாரத் தடையால் இந்தியா அதிகளவில் பாதிக்கப்படும் என்பதால், இந்தியாவுக்கு விலக்கு அளிக்கப்படும் என்று இந்திய அரசு நம்பிக்கையில் இருந்தது. இதன்பிறகு இந்தியா உட்பட எட்டு நாடுகளுக்கு விலக்கு அளிப்பதாக அமெரிக்கா அறிவித்தது.
தற்காலிகமாக இந்தியா, ஜப்பான், சீனா, தென் கொரியா உட்பட ஏழு நாடுகளுக்கு விலக்கு அளிப்பதாகவும், விரைவில் இறக்குமதியைப் படிப்படியாகக் குறைத்துக்கொள்ள வேண்டுமெனவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து நவம்பர் 3ஆம் தேதியன்று டெல்லியில் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சரான தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நுகர்வு நாடுகளின் நலனைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிட முடியாது என மாண்புமிகு பிரதமர் பரப்புரை மேற்கொண்டு வருகிறார். உலக அரசியல் சூழலைப் புரிந்துகொண்டு இந்தியாவால் விலக்கைப் பெற முடிந்திருக்கிறது. இந்தியா உட்பட சில நாடுகளுக்கு அமெரிக்கா விலக்களித்துள்ளது” என்று கூறினார்.

No comments

Powered by Blogger.