லாரா: சச்சினா, கோலியா?

களச்செயல்பாடுகளைத் தாண்டி ஃபிட்னஸிலும் தனிக்கவனம் செலுத்திவரும் விராட் கோலியை மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் பிரைன் லாரா பாராட்டியுள்ளார்.


இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, சர்வதேச அரங்கில் தான் தலைசிறந்த வீரர் என்பதை ஒவ்வொரு போட்டியிலும் நிரூபித்து வருகிறார். சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 10,000 ரன்களைக் கடந்து ஒருநாள் அரங்கில் அதிவேகமாக 10,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையைப் படைத்திருந்தார். இவரது இந்தச் சாதனைக்கு முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான்களான விவியன் ரிசார்ட்ஸ், சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி ஆகியோரிடமிருந்து பாராட்டுக்கள் கிடைத்த நிலையில் தற்போது மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரரான பிரைன் லாராவிடமிருந்தும் பாராட்டு கிடைத்துள்ளது.

பெங்களூருவில் நேற்று (நவம்பர் 3) நடைபெற்ற கோல்டன் ஈகிள்ஸ் கோல்ஃப் சாம்பியன்ஷிப் தொடரின் துவக்க விழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய பிரைன் லாரா, "விராட் கோலி இன்று என்ன செய்து கொண்டிருக்கிறாரோ அது தனிச்சிறப்பானதாகும். ரன் குவிக்கும் வேகம், அவரது ஃபிட்னஸ், மற்ற விஷயங்களுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவம் இப்படி பல்வேறு துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு தன்னை ஒரு சிறந்த தலைவனாக அடையாளப்படுத்தி வருகிறார்" என்று தெரிவித்துள்ளார்.

சச்சின், கோலி இருவரில் யார் சிறந்தவர்கள்? என்று கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த லாரா,"சச்சினையும் என்னையும் வைத்து நிறைய ஒப்பீடுகள் வருவது வழக்கம். இதையெல்லாம் நாங்கள் ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள மாட்டோம். நிச்சயமாகச் சொல்கிறேன் கோலியும் இதுபோன்ற ஒப்பீடுகளை விரும்ப மாட்டார். ஒப்பீடு குறித்து அனைவரது கணிப்பும் தவறானது. எல்லோரும் வெவ்வேறு காலகட்டத்தில் வளர்ந்து வந்தவர்கள்" என்று கூறினார்.

No comments

Powered by Blogger.