சபரிமலையில் போலீசார் குவிப்பு!

சபரிமலை ஐயப்பன் கோயிலில் நாளை (நவம்பர் 5) நடை திறக்கப்படுவதால், அங்கு சுமார் 1,500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காகக் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் சன்னிதானத்துக்குச் செல்ல விரும்பும் பெண்கள் போலீசாரை அணுகினால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற தயாராக இருப்பதாக பத்தனம்திட்டா காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்று வழிபடலாம் என உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 28ஆம் தேதி தீர்ப்பளித்தது. இத்தீர்ப்பைச் செயல்படுத்த கேரள அரசு முயன்றுவரும் நிலையில், அதற்குப் பலத்த எதிர்ப்புகளும் நாடு முழுவதும் கிளம்பியது. இதையடுத்து, ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோயில் நடை ஆறு நாட்கள் திறக்கப்பட்டபோது, பல பெண்கள் கோயிலுக்குள் செல்ல முயற்சி செய்தனர். ஆனால், இந்துத்துவ அமைப்புகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் சேர்ந்து அவர்களைக் கோயிலுக்குள் நுழையவிடாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அவர்கள் கோயிலுக்குச் செல்ல முடியாமல் திரும்பி அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில், சித்திரை ஆட்ட விசேஷம் என்ற விழாவுக்காக, ஐயப்பன் கோயில் நடை நாளை மாலை திறக்கப்படவுள்ளது. இதற்கான பணிகளில் நேற்று மாலை முதலே கோயில் நிர்வாகத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். இதைத் தொடர்ந்து, சபரிமலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கடந்த 3ஆம் தேதி இரவு முதல் இலவங்கல், நீலக்கல், பம்பை மற்றும் சன்னிதானம் ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதோடு, 1,500க்கு மேற்பட்ட போலீசார், 20 பேர் கொண்ட குழுக்களாகப் பிரிக்கப்பட்டு, பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பத்தனம்திட்டா காவல் கண்காணிப்பாளர் டி.நாராயணன் கூறும்போது, “சபரிமலை கோயிலைச் சுற்றியும் 1,500 போலீசார் பாதுகாப்புப் பணிக்காக நியமிக்கப்பட்டுள்ளனர். ஏடிஜிபி அனில்காந்த் தலைமையில், பாதுகாப்புப் பணிகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். ஊடகவியலாளர்கள் மீண்டும் கோயில் நடை திறக்கும் நாள் வரை கோயிலில் இருந்து விலகி இருக்க வேண்டும். போராட்டங்களில் ஈடுபடுபவர்களைத் தடுக்க நீலக்கல்லுக்குச் செல்லும் வழியில் பல இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

மேலும், போலீசார் தவிர்த்து, 20 பேர் கொண்ட கமாண்டோ குழுவினரும் சன்னிதானம், நீலக்கல் மற்றும் பம்பா உள்ளிட்ட பகுதிகளில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சன்னிதானம் செல்ல முயன்ற பெண் பக்தர்களைத் தடுத்தது தொடர்பாக, 3,701 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சபரிமலை கோயிலுக்குச் செல்ல விரும்பும் பெண்கள் எங்களை அணுகினால், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை நிறைவேற்ற நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.