தோல் புற்றுநோயால் உயிரிழக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

1985 ஆம் ஆண்டு முதல் அபிவிருத்தியடைந்த நாடுகளில் தோல் புற்றுநோயால் உயிரிழக்கும் ஆண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் பாதிக்கப்படும் பெண்களின் எண்ணிக்கை கணிசமான அளவில் குறைந்துள்ளதாகவும் கிளாஸ்க்கோவில் நடைபெற்ற மருத்துவ மாநாட்டில் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.


கடந்த 30 ஆண்டுகளில் அயர்லாந்து மற்றும் குரோஷியாவில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகியுள்ளதுடன் ஸ்பெயினிலும், இங்கிலாந்திலும் 70 சதவிகிதமும், நெதர்லாந்தில் 50 சதவிகிதமும் பிரான்ஸ் மற்றும் பெல்ஜியத்தில் 60 சதவிகிதமும் அமெரிக்காவில் 25 சதவிகிதமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரிய ஒளியிலிருந்து ஆண்கள் தம்மை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்காமையும் பொதுச் சுகாதார எச்சரிக்கைகளை பின்பற்றாமையுமே ஆண்கள் அதிகளவில் இறப்பதற்கு காரணங்களென மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மெலனோமா புற்றுநோய்களில் 90 சதவிகிதம் சூரியனிலிருந்து வெளியேறும் ஊதா கதிர்வீச்சுகள் காரணமாகவோ அல்லது பிற சாதனங்களிலிருந்து வெளியேறும் ஊதா கதிர்வீச்சுகள் காரணமாகவோ ஏற்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரியல் அல்லது மரபணு காரணிகள் தோல் புற்றுநோயில் பங்கு வகிக்கின்றனவா? என்பதை விஞ்ஞானிகள் ஆராய்ந்துவருகின்ற போதிலும் ஊதா கதிர்வீச்சுகளிலிருந்து தம்மை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஆண்களை மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.