இந்துக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும்!

சபரிமலை விவகாரத்தில் இந்துக்களின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும். மத ரீதியிலான விடயங்களில் நீதிமன்றம் தலையிடுவது தேவையற்றது என தெரிவித்துள்ளார் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவரும், மக்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ்.


பாலின பாகுபாடுகளை காரணம் காட்டி பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க மறுப்பது வெளிப்படையான சட்ட விரோதம். ஆகவே, அனைத்து வயது பெண்களுக்கும் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபாட்டு உரிமை வழங்கப்பட வேண்டுமென கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிரடி தீர்ப்பளித்திருந்தது உச்ச நீதிமன்றம்.

ஆனால், நீண்ட கால எங்களது நம்பிக்கையில் தலையிடும் நீதிமன்றம் பிற மதங்களின் நம்பிக்கைகளில் மட்டும் தலையிடாதது ஏன்? இந்துக்கள் என்ன நாதியற்றவர்களா? என்ற முழக்கங்களுடன் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரளத்தில் பெரிய அளவிலான போராட்டங்களை நடத்திவருகின்றன பாஜக உள்ளிட்ட இந்துத்துவ அமைப்புகள்.

இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார் அன்புமணி ராமதாஸ். சபரிமலைக்கு தனியான வழிபாட்டு முறை உள்ள காரணத்தினாலேயே அங்கு குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் அனுமதிக்க படுவதில்லை. மற்றபடி, அங்கு பாலின பாகுபாடுகள் இல்லையென தெரிவித்துள்ள அன்புமணி சபரிமலைக்கு இருமுடி கட்டி சென்றுவழிபாடு மேற்கொண்டுவிட்டு திரும்பியுள்ளார்.

No comments

Powered by Blogger.