சமாதானப் பேரவையின் ஆலோசனைக் குழுக் கூட்டம்

இனங்களுக்கிடையில் வேண்டுமென்றே ஏற்படுத்தப்படும் சிறு விஷமத்தனங்கள், பெருந்தீயாகப் பரவுவதைத் தவிர்ப்பதே பொலிஸ் ஆலோசனைக் குழுக்களின் நோக்கம் என ஆசியா மன்றத்தின் திட்ட முகாமையாளர் சட்டத்தரணி ஸாஜஹான் றொஷான் தெரிவித்தார்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய சமாதானப் பேரவையினால் முன்னெடுக்கப்படும் சமாதான செயற்பாடுகள் குறித்து மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் ஆலோசனைக் குழுக்களின் உறுப்பினர்கள், மட்டக்களப்பு மாவட்ட சர்வ மதப் பேரவை உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூகப் பிரதிகள் ஆகியோருக்கிடையில் தெளிவுபடுத்தும் கொள்கை ஆலோசனைக் குழுக் கூட்டம் இன்று வியாழக்கிழமை காலை மட்டக்களப்பு கிறீன் கார்டன் விடுதியில் இடம்பெற்றது.

இந்தக்கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இனங்களுக்கிடையில் முறுகல்நிலை ஏற்படுத்தப்படுகின்றபோது எவ்வாறு பொலிஸாருடன் இணைந்து செயற்பட்டு சுமுக நிலையை உருவாக்கலாம் என்பது குறித்து சிந்திப்பதற்கு இத்தகைய பொலிஸ் ஆலோசனைக் குழு, சர்வமதப் பேரவை உட்பட சமூகநல அமைப்புக்கள் மற்றும் தன்னார்வலர்களின் பங்களிப்புக்கள் மிக அவசியம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விரும்பத் தகாத சம்பவங்கள் இடம்பெற்று அதன் பின்பு இழப்பீடுகளும், பரிகாரங்களும் தேடுவதை விட குழப்பங்கள் இடம்பெறாமல் வருமுன் தடுப்பதே மேலானனதாகும்.

சமூக வன்முறைகளை ஏற்படுத்தி இயல்பு வாழ்க்கையைச் சீர்குலைத்து அமைதியையும் அழிவையும் தோற்றுவிக்கும் காரணிகளைக் கண்டறிந்து அவற்றைத் தடுக்க வேண்டும் இந்தப் பொறுப்பு பொலிஸாருக்கு மட்டும் உரியதல்ல. முழு சமூகமும் தம்மை அர்ப்பணித்துப் பணியாற்ற வேண்டும் என வலியுறுத்தினார்.

கைது நடவடிக்கை, புலனாய்வு, குற்றப் பரிசோதனை இதுபோன்ற பொலிஸாரின் நடவடிக்கைகளின்போது சமூக இயல்பு நிலையும் இன ஒற்றுமையும் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பொலிஸ் ஆலோசனைக் குழுக்களின் பங்களிப்பை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பது பொலிஸ் மா அதிபரின் ஆலோசனையாக இருக்கின்றது.

அந்த வகையில் சமூகத்தில் குழப்பங்கள் ஏற்படாத வகையில் பொருத்தப்பாடான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இந்த ஆலோசனைக் குழுக்கள் உதவுகின்றன என்றும் அவர் ஆசியா மன்றத்தின் திட்ட முகாமையாளர் சட்டத்தரணி ஸாஜஹான் றொஷான் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்ட சர்வ மதப் பேரவையின் இணைப்பாளர் இராசையா மனோகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆசிய மன்றத்தின் சமாதானத்திற்கும் சமூகக் கலந்துரையாடலுக்குமான நிகழ்ச்சித் திட்ட அலுவலர் செலினா கிறேமர் குழு முயற்சிக்கான சமூக ஒருங்கிணைப்பு அமைப்பின் பணிப்பாளர் ஏ.ஜே. காமில் இம்தாத் உட்பட பொலிஸ் அலுவலர்கள், மட்டக்களப்பு மாவட்ட சரவமதப் பேரவை உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கண்டனர்.

#Tamil   #Tamilnews  #Srilanka   #Jaffna  #Tamilarul.net   #News #Batticola  #Hindu
Powered by Blogger.