தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றுதிரண்டு ஓரணியில் நிற்க வேண்டும்!

எதிர்வரும் காலங்களில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றுதிரண்டு ஓரணியில் நிற்க வேண்டும் என முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார்.


உயர் தரப்பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள், சாதாரண தரத்தில் சிறப்பு சித்திகளை பெற்ற மாணவர்கள் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா நெடுங்கேணி மகாவித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் செ.பவேந்திரன் தலைமையில் இன்று(செவ்வாய்கிழமை) நடைபெற்றது.

இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “இன்று நாடு இக்கட்டான நிலைக்கு வந்துள்ளது. நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை நாளைக்கு என்ன நடக்கும் என்பது தெரியாது.

ஆனால் பொதுத்தேர்தலை சந்திக்க வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். எங்கள் தமிழ் மக்களுக்கு இரண்டு பிரச்சனைகள் உள்ளது. ஒன்று நிரந்தரமான அரசியல் தீர்வு மற்றையது அழிந்துபோன எமது பிரதேசத்தினை கட்டியெழுப்புதல்.

ஆகவே தேர்தல் நெருங்கும் வேளையில் தமிழ் அரசியல் கட்சிகள் அனைத்தும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். என்ன விமர்சனங்கள் இருந்தாலும் அதனை நாம் பேசித்தீர்த்துக்கொள்ளுவோம்.

இதுவரை பௌத்த சிங்கள பேரினவாதம் தான் நினைத்ததை செய்ய முயன்ற போது, முதன் முதலாக தமிழ் தேசியமும் தமிழ் கட்சிகளும் ஒற்றுமையாக நின்று அவர்களை திக்குமுக்காட வைத்துள்ளது.

ஆகவே இதனையொரு நல்ல எடுத்துக்காட்டாக கொண்டு எதிர்வரும் காலங்களில் தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒன்றுதிரண்டு ஓரணியில் நிற்க வேண்டும்“ என தெரிவித்துள்ளார். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.