சாவகச்சேரி வைத்தியசாலையில் இரண்டு வைத்திய அத்தியட்சகர்கள்!

நாட்டில் இரண்டு பிரதமர்கள், இரண்டு சபை முதல்வர்கள் இருப்பது போல சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் இரண்டு வைத்திய அத்தியட்சகர்கள் கடமையிலிருப்பதால், பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.


வைத்திய அத்தியட்சகர் ஒருவர் கடமையிலில்லாத சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு, முறைப்படி நியமிக்கப்பட்ட வைத்திய அத்தியட்சகர் தற்போது பெரும் இழுபறியில் சிக்கியுள்ளார்.

சாவகச்சேரி வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் பதவி வெற்றிடம் ஏற்பட்டபோது, வடக்கு ஆளுனரால்  பதில் வைத்திய அத்தியட்சகராக ப.அச்சுதன் நியமிக்கப்பட்டார். ஏழு மாதங்களாக பதில் வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றினார்.

எனினும், வைத்திய அத்தியட்சகராக தகுதி வாய்ந்த ஒருவரை- தயாளினி மகேந்திரன்- சுகாதார அமைச்சு நியமித்திருந்தது. உரிய நியமங்களினடிப்படையில் அவர் நியமிக்கப்பட்டு, கடமைகளை பொறுப்பேற்குமாறும் அறிவித்தல் அனுப்பியிருந்தது.

இதன்படி, நேற்று முன்தினம்- 07ம் திகதி- அவர் பிற்பகல் 4 மணிக்கு கடமையை பொறுப்பேற்க சென்றிருந்தார். அன்றையதினம் மாலை 3.30 மணிக்கே பதில் வைத்திய அத்தியட்சகர் அச்சுதன், நிர்வாக உத்தியோகத்தர் அனைவரும் கடமைகளை முடித்துக் கொண்டு வீடு திரும்பியிருந்தனர்.

புதிதாக நியமிக்கப்பட்ட வைத்திய அத்தியட்சகர் கடமையை பொறுப்பேற்க வந்ததையடுத்து, கடமையை முடித்து வீடு திரும்பியிருந்த நிர்வாக உத்தியோகத்தரை ஒரு தரப்பினர் மீள அலுவலகத்திற்கு அழைத்து, வைத்தியர் தயாளினி மகேந்திரன் கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு தகுதி வாய்ந்த வைத்திய அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டதால், வைத்தியசாலை அபிவிருத்தி சங்கத்தை சேர்ந்த சிலர் வைத்தியசாலைக்கு வெளியில் வெடி கொளுத்தியதாகவும் தகவல்.

இதேவேளை, வைத்தியசாலைக்குள் இரண்டு தரப்பு உருவாகி, ஏட்டிக்கு போட்டியாக செயற்படுவதால் குழப்பங்கள் ஏற்படலாமென கருதிய பொலிசார், புதிய வைத்திய அத்தியட்சகருக்கு வரவேற்பளிக்கப்பட்ட போது, அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.

பதில் வைத்திய அட்சகராக கடமையாற்றிய ப.அச்சுதனுக்கு சார்பான சிற்றூழியர்கள், வைத்தியர்கள், நோயார் நலன்புரி சங்கத்தை சேர்ந்த சிலர் கையெழுத்திட்ட கடிதமொன்று ஆளுனரிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதில் ப.அச்சுதனே வைத்தியசாலை அத்தியட்சகராக தொடர வேண்டுமென கோரப்பட்டிருந்தது. ப.அச்சுதனும் அதை விரும்புவதாக கூறப்படுகிறது.

இதனால், சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்குள் பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது. யார் உண்மையான வைத்திய அத்தியட்சகர் என்ற குழப்பம்- இலங்கை அரசியலில் ஏற்பட்ட பிரதமர் சர்ச்சையை போல- ஏற்பட்டுள்ளது.

வைத்தியசாலை ஊழியர்களின் ஒரு பகுதியினரின் கடிதத்தையடுத்து, ஆளுனரின் செயலாளரால் அவர கடிதமொன்று வடக்கு சுகாதார அமைச்சின் செயலாளரிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில், புதிய வைத்திய அத்தியட்சகர் கடமைகளை தொடர்வதை தற்காலிகமாக இடைநிறுத்தி, பதில் வைத்திய அத்தியட்சகரே கடமையை தொடர வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது மீண்டும் சாவகச்சேரி வைத்திய அத்தியட்சகராக கடமையாற்றும் ப.அச்சுதன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார். அதில், புதிதாக கடமையை பொறுப்பேற்ற வைத்திய அத்தியட்சகர் ஆவணங்களை துஷ்பிரயோகம் செய்தார் என முறையிடப்பட்டுள்ளது.

அத்துடன், வைத்திய அத்தியட்சகரை வரவேற்ற வைத்தியர்கள், உத்தியோகத்தர்களை குறிவைத்து செயற்படுகிறார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. புதிய வைத்திய அத்தியட்சகரை வரவேற்ற, சட்டவைத்திய அதிகாரியிடமும், நிர்வாக உத்தியோகத்தரிடமும், ஊழியர்களிடமும் விளக்கம் கோரியுள்ளார்.

இரண்டு வைத்திய அத்தியட்சகர் விவகாரம் தொடர்பாக இன்று (9) காலை ஆளுனர் செயலகத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டபோதும், அதில் தீர்மானகரமான முடிவுகள் எட்டப்படவில்லை. ஆளுனர் தற்போது கொழும்பில் தங்கியுள்ளதால், அவர் யாழ்ப்பாணம் திரும்பியதும், இறுதி முடிவெடுக்கப்படுமென ஆளுனரின் செயலாளர் இதன்போது குறிப்பிட்டார்.

இதேவேளை, புதிய வைத்திய அத்தியட்சகரை வரவேற்ற ஊழியர்களிற்கு, அன்றைய தினம் இரவே மர்மநபர்கள் தொலைபேசி வாயிலாக அச்சுறுத்தல் விடுத்துள்ளனர். இது குறித்து பொலிசாரிடம் முறையிடப்பட்டுள்ளது.

#Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net #Chavakachcheri  #jaffna #Hospital #சாவகச்சேரி #வைத்தியசாலை #வைத்திய அத்தியட்சகர் 

No comments

Powered by Blogger.