சுமந்திரன் ஐ.தேசியக் கட்சியில் போட்டியா??

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டாயம் தேர்தலில் போட்டியிடும் என்றும் நாங்கள் ஏற்கனவே கட்டமைப்புடன் உள்ள கட்சி எனவும் முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.


மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

நாங்கள் கூட்டுக் கட்சிகள் என்ற விதத்திலே எல்லாப் பங்காளிக் கட்சிகளுடனும் சேர்ந்து பேசியதற்குப் பிறகு எமது களநடவடிக்கைகள் அமையும் என்றும் தெரிவித்துள்ளார்.

வியாழேந்திரன் தொடர்பில் ஏற்கனவே நாங்கள் அழைப்பு விடுத்திருந்தோம். அதற்கு அவர் எவ்வித பதிலும் தரவில்லை. அதை விட தமிழரசுக் கட்சியின் தலைவர் அவரை முற்றாக நிராகரித்து விட்டார்.

எனவே இனிமேல் வியாழேந்திரன் கூட்டமைப்பில் வந்து சேர்வதற்கான எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டு விட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாங்கள் தமிழ்த் தேசியத்தை நோக்கிச் செல்பவர்கள். தமிழ்த் தேசியத்தோடுசெயற்படுபவர்கள். அந்தவகையில் எமது கொள்கையுடன் சேர்ந்தவர்கள் எம்மோடு சேர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

தேர்தல் விடயங்கள் தொடர்பில் விசேடமாக ஆராய்ந்த பின்னர் தான் நாங்கள் முடிவுகளை மேற்கொள்வோம்.

இதேவேளை, சுமந்திரன் எவ்வித காரணம் கொண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் போட்டியிடுவது என்பது நடவாத ஒரு விடயம்.

அவர் எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர். அவர் தேசியத்திற்காக மட்டும் தான் எங்களோடு இருக்கின்றார். அவர் இளமையில் இருந்து எமது தேசியம் தொடர்பாகச் சிந்தித்தவர்.

அவருடைய உணர்வுகள் எங்களுக்குத் தெரியும். அவர் அரசியலுக்கு என்று வரவில்லை. அரசியலில் நிலைத்திருக்க வேண்டும் என்றும் அவருக்கு எண்ணம் இல்லை.

எனவே அவர் தொடர்ந்தும் எங்களோடு தான் வேலை செய்வாரே தவிர அவர் எங்களோடு வேலை செய்ய முடியாது என்ற சூழ்நிலையும் அவருக்கு ஏற்படாது என்றும் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
#Sumanthiran  #TNA   #UNP  #Tamilnews  #Tamil  #Srilanka #Colombo  #Tamilarul.net 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.