கஜா - அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டுக: சிபிஎம்!

கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை துரிதப்படுத்த அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.


கஜா புயலால் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. கஜா புயலின் கோரத்தாண்டவம் மக்களை புரட்டிப் போட்டிருக்கிறது. வீட்டை இழந்து, கால்நடைகளை இழந்து, பயிர்கள் அனைத்தும் புயல் மற்றும் மழையில் அழிந்து மக்கள் அனைவரும் நிர்க்கதியாக நிற்கின்றனர்.

புயல் வருவதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து மக்களுக்கு அறிவிப்பு செய்த தமிழக அரசு புயலுக்கு பின் நிலைமைகளைச் சீர் செய்ய எந்தவித முன்தயாரிப்புகளும் செய்யவில்லை என்று அரசியல் கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று (நவம்பர் 21) வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக அரசின் கையலாகாத்தனத்தால் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப் படவில்லை. இதனால் உள்ளாட்சி பிரதிநிதிகள் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டது. எனவே, தற்போது ஏற்பட்டுள்ள அனைத்துத் துயரங்களுக்கும் தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

“புயலால், பாதிக்கப்பட்டுள்ள மக்கள் தண்ணீருக்கும், உணவுக்கும், மின்சாரத்திற்கும் தன்னெழுச்சியாக பல இடங்களில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அரசு நிர்வாகத்தை முடுக்கி விட்டு நிவாரணப் பணிகளை துரிதப்படுத்துவதற்கு மாறாக, முதலமைச்சரும், இதர அமைச்சர்களும் எதிர்க்கட்சிகள் தூண்டி விடுவதாகக் குற்றம் சாட்டுவது நகைப்பிற்கு உரியது” என்று விமர்சித்துள்ளார்.

புயல் பாதித்து 5 நாட்கள் கழித்து இப்பகுதியைப் பார்வையிட வந்த தமிழக முதலமைச்சர் வானிலையைக் காரணம் காட்டி தரையில் இறங்காமலேயே சென்றதற்கு கண்டனம் தெரிவித்துள்ள கே. பாலகிருஷ்ணன், மின்சாரம் உடனடியாக வழங்கக் கூடுதல் ஊழியர்களை ஈடுபடுத்த வேண்டும் என்றும், நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்,

”நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு ரூ.5000 நிவாரண நிதியாக வழங்குவது என அரசு அறிவித்துள்ளது. இதனைப் புயல் பாதித்த பகுதியில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் இந்த ரூ.5000 வழங்கப்பட வேண்டும், குடிசை வீடுகளுக்கு ரூ.10 ஆயிரம் என்பது போதுமானதல்ல, இந்தத் தொகையை உயர்த்தி குடிசை வீடுகளுக்கு ரூ.50 ஆயிரம், பகுதி அளவில் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ.25 ஆயிரமும் வழங்க வேண்டும். அதே போல், நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம் என்பதை உயர்த்தி ரூ.25 ஆயிரம் வழங்கவேண்டும், தென்னை சாகுபடிக்கு ஏக்கர் கணக்கில் நஷ்ட ஈடு வழங்குவதற்கு மாறாக, தென்னை மரம் ஒன்றுக்கு ரூ.20000 வழங்க வேண்டும். அதே போல் இறந்துபோன மாடுகளுக்கு தலா ரூ.50 ஆயிரமும், ஆடுகளுக்கு தலா ரூ.8 ஆயிரமும் வழங்க வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், கஜா புயல் பாதித்த பகுதிகளில் மீட்பு நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும், நிவாரணப்பணிகளை முழுமையாக மேற்கொள்ளவும் தமிழக அரசு உடனடியாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டுமெனக் கேட்டுக்கொண்டுள்ளார்.

கஜா புயல் பாதிப்பை தேசியப்பேரிடராக அறிவித்திடவும், ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு முழுமையான இழப்பீட்டை பெற்றிடவும் மத்திய அரசை வற்புறுத்துவதற்கு அனைத்துக்கட்சித் தலைவர்கள், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் கொண்ட குழு அமைத்து முதலமைச்சர் தலைமையில் பிரதமரைச் சந்தித்து வற்புறுத்துவதற்கான ஏற்பாட்டினை தமிழக முதலமைச்சர் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
#Kaya  #India 
Powered by Blogger.