யாழில் சகோதரியுடன் தனித்திருந்த ஏழு வயது சிறுவனுக்கு ஏற்பட்ட கதி!

தனது ஐந்து வயது சகோதரியுடன் வீட்டில் தனித்திருந்த ஏழு வயது சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளான். குறித்த சம்பவம் யாழ்.தென்மராட்சி மறவன்புலோ பகுதியில் இடம்பெற்றுள்ளதாக எமது யாழ்.மாவட்ட விசேட செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

தந்தையார் ஏற்கனவே உயிரிழந்து விட்ட நிலையில் மேற்படி சிறுவன் தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வந்துள்ளார். நேற்றைய தினம்(25) குறித்த சிறுவனின் தாயாரும், அவனது மூத்த சகோதரனும் வேலைக்குச் சென்றுவிட உயிரிழந்த சிறுவனும், அவனது சகோதரியான ஐந்து வயதுச் சிறுமியும் வீட்டில் தனித்திருந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சிறுவன் வீட்டுக் கிணற்றில் தண்ணீர் அள்ளுவதற்காகச் சென்றுள்ளான். அப்போது எதிர்பாராத விதமாக அவன் கிணற்றில் விழுந்துள்ளான்.இதனால்,அதிர்ச்சியடைந்த சகோதரி உரத்த தொனியில் அழுது குழறினார்.

சகோதரியின் அவலக் குரல் கேட்டு அப்பகுதியில் திரண்ட அயலவர்கள் கிணற்றிலிருந்து சிறுவனை மீட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர். எனினும், குறித்த சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக சாவகச்சேரிப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Powered by Blogger.