பாடுநிலாவே பாகம்-1

இந்தியாவின் திருச்சியில் இருந்து புறப்பட்ட எயார் இந்திய விமானம் மெல்ல மெல்ல கீழ் இறங்கியது. வானம் அருகில் இருப்பது போன்ற ஒரு மாயத்தோற்றம் மனங்களை நெகிழச் செய்தது. ஆகாய வனப்பு மெல்ல
மறைந்த அந்தப் பொழுதில் கொழும்பு மாநகரின் அழகு உள்ளத்தை ஈர்த்தது. இடைவெளியற்ற கட்டடங்களும் புனரமைக்கப்பட்ட வீதிகளும் இயற்கையின் நன்கொடையும் அந்நகரை இந்திரலோகம் போல மாற்றியிருந்தது. மேலும் கீழுமாய் விரைந்த பேரூந்துகள், வீதியை நிறைத்துச்சென்ற வாகனங்கள், இவை எல்லாம் பொருளாதார விருத்தியை காட்டுகின்றனவா, எண்ணமிட்டபடியே நிமிர்ந்து அமர்ந்தான் காங்கேசன். அந்த விமானம் கொழும்பு விமான நிலையத்தில் தரைதட்டியது.
அவனுடன் பயணித்த அநேகம்பேர் சுற்றுலா பயணிகள் போல இருந்தனர். அவனையும் சுற்றுலா வந்தவனாகத்தான் பலரும் எண்ணியிருப்பார்கள். முடிவில்லா ஒன்றைத்தேடி அவன் இலங்கை வந்திருப்பது அவனுக்கு மட்டுமே தெரியும். அவனது விழிகளுக்குள் தேங்கி நின்ற ஏக்கம், அவனது மனதில் சொல்லமுடியாத துயரம் ஒன்று புதைந்து கிடப்பதை தெளிவாகக் காட்டியது. சில வேளைகளில் இயல்பாக இருந்த அவன் பல வேளைகளில் தாங்கமுடியாத வேதனையை அடைந்தான். அந்த துயரத்தின் சாயல் அவனது முகத்திலும் தோன்றி மறைந்தது.
சிந்தனையில் சிக்கியிருந்த காங்கேசன், விமானம் ஓடுபாதையில் செல்வதை உணர்ந்ததும் சின்னதாய் ஒரு புன்னகையை முகத்தில் பூசிக்கொண்டான். அதையும் மீறி இதயம் ‘பக்பக்’ என அடித்துக்கொண்டது. இத்தனை வருடங்களாக அவனது உள்ளத்தை அரித்த கேள்விக்கு இன்னும் இரண்டு மூன்று நாளில் விடை தெரிந்துவிடப்போகிறது. அந்த முடிவு எத்தகைய கொடியதெனினும் தாங்கிக் கொள்ளவேண்டும் என்பதும் உடனே நாடு திரும்பிவிடவேண்டும் என்பதும் அவனது தாயாரின் அன்புக்கட்டளையாக இருந்தது. அவனும் அதற்குச் சம்மதித்த பின்னரே இந்தப் பயணத்திற்கு அனுமதி கிடைத்து அவன் புறப்பட்டிருந்தான்.
விமானம் தனது பயணத்தை முடித்துக்கொள்ள பயணிகள் யாவரும் இறங்கத் தொடங்கினர். அவர்களுடன் கலந்து வெளியே வந்தான். சோதனைகளை முடித்துவிட்டு வந்தபோது அவனுக்காக காத்திருந்தான் இசையாளன். கூடவே அவனது தகப்பனாரும். ஹற்றனில் வசிக்கும் இசையாளன் காங்கேசனுடன் மும்பை திரைப்படக் கல்லூரியில் ஒன்றாகப் படித்தவன். விடுமுறைக்கால கொண்டாட்டங்களும் பண்டிகைகளும் அங்கிருந்தவரை காங்கேசன் வீட்டிலேதான் கழிந்திருக்கிறது இசையாளனுக்கு. நல்லதொரு நட்பு அவர்களுக்குள் பூத்திருந்தது. அவனது இந்த தேடலுக்கு இசையாளனின் உந்துதலும் ஒரு விதத்தில் பலம் தந்தது. வீட்டில் மறுத்தபோதும் தனது குடும்பத்தினரிடம் கெஞ்சி, மன்றாடி, கோபப்பட்டு, சமாதானப்படுத்தி இதோ புறப்பட்டு இலங்கை வந்துவிட்டான்.
சிந்தனையில் லயித்துவிட்டிருந்த அவனை அருகில் வந்து கைகொடுத்து வரவேற்ற இசையாளனின் அப்பா தான் இகலோகத்திற்கு அழைத்து வந்தார். பரஸ்பரம் புன்னகையையும் அன்பையும் பரிமாறிக்கொண்டனர். “வா மகனே” அன்பான அவரது தழுவல் ஆயிரம் மடங்கு பலமானதாக தோன்றியது அவனுக்கு. சந்தோச மிகுதியில் நண்பனைக் கட்டித் தழுவிக்கொண்டான்.
“எப்படிடா இருக்கே?” அன்பாக வந்த நண்பனின் வார்த்தைக்கு
“இருக்கேன்” என்றான்.
சோகம் கலந்து வெளிப்பட்ட காங்கேசனின் வார்த்தைகளின் ஆழத்தையும் அத்திவாரத்தையும் புரிந்துகொண்ட இசையாளன் ஆதரவாக நண்பனின் கரங்களைத் தட்டிக்கொடுத்தான்.
“போகலாமா?” கேட்டுக்கொண்டே காங்கேசனின் உடுப்பு பையை வாங்கிக்கொண்டு நடந்த இசையாளனின் பின்னால் நடந்துசென்றான் காங்கேசன்.
அதிகாலைப்பொழுது, எழில் கொஞ்சும் ஹற்றன் நகரின் இயற்கை வனப்பு உள்ளத்தை கொள்ளை கொண்டது. வேகமாகச் சென்ற வானில் ஜன்னலோரம் இருந்த காங்கேசனால் அந்த எழிலைச் சற்றும் ரசிக்கமுடியவில்லை. அந்த அழகையும் மீறிய ஒரு வித பயம் அவனை ஆட்கொண்டது. அவனது இந்தப் பயணத்தில் அவனுக்கு கிடைக்கப்போகும் பதில் உடன்பாடாகவோ அல்லது எதிர்மறையாகவோ அமையலாம். ‘ஒருவேளை எதிர்மறையான பதில் கிட்டினால் ----? ஐயோ எப்படி அவன் தாங்கிக்கொள்ளப்போகிறான்?’
‘இல்லை –இல்லை--- அப்படி எதுவும் நடந்திருக்காது’, மனம் அவசரமாய் ஓலமிட்டுச் சொன்னது. கண்கள் சிந்திய ஒருதுளி நீரை நண்பன் அறியாத வண்ணம் கைக்குட்டையால் மெல்ல ஒற்றிக்கொண்டான்.

தொடரும்.


கோபிகை



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.