பாடு நிலாவே

காலை ஏழுமணியளவில் இசையாளனின்
வீட்டை அடைந்தனர். அங்கே இசையாளனின் தாய், அவனது அக்கா குடும்பம், தங்கை குடும்பம் என ஒரு பட்டாளமே அவனை வரவேற்க காத்திருந்தது. இந்தியாவில் படிக்கும் காலத்தில் தனது குடும்பத்தில் ஒருவனாகவே இசையாளன் இருந்தான் என்பதன் பிரதிபலிப்பே இத்தகைய அன்பின் வெளிப்பாடு என உணர்ந்துகொண்டான்.
“வா மகனே, எப்பிடி பயணம் எல்லாம் சௌகர்யமா இருந்துதா?” என்ற இசையாளனின் தாயாரின் அன்பான வரவேற்பும் அவனது சகோதரிகளின் நேசம் நிறைந்த புன்னகையும் அவனை மெய்சிலிர்க்கச் செய்தது. மகத்தான அன்பின் ஆழத்தை அவர்களில் கண்டான் காங்கேசன்.

குதூகலமான குசல விசாரிப்பில் இருந்து அவனை தனது அறைக்கு அழைத்துச்சென்ற இசையாளன்,
“ டேய், மச்சான், முதல்ல குளிச்சு சாப்பிட்டு, ஓய்வெடு, அதுக்குப்பிறகு மற்ற விசயங்களைப் பிளான் பண்ணலாம்” என்றவன், கையில் பூப்போன்ற துவாயைத் திணித்து “அதோ அங்கதான், குளிச்சிட்டு வா” எனத்தள்ளினான்.
அவனது கையை தட்டிவிட்ட காங்கேசன், “இல்லடா மச்சி, நாம உடனே புறப்படணும், ஓய்வெல்லாம் வேண்டாம், உனக்குத்தான் தெரியுமே, நான் வந்திருக்கிற விசயம்” என்றான்.
“டேய் உன்னோட பிரச்சினை எனக்குத் தெரியுது, ஆனா உடம்பும் மனசும் ஓய்வெடுக்கிறது தான் நல்லது” என்றான்.
“டேய் இசை, என்னடா சொல்றாய்? என்னோட உடம்புதான் ஓய்வெடுக்குமே தவிர மனசு ஓய்வெடுக்காதுடா, அது இன்னும் அதிகமா அவஸ்தைப்பட்டுட்டேதான் இருக்கும், அப்பாட்ட சொல்லி வான் ஒழுங்கு பண்றியா, இல்ல ---“ என்றவன், “எதுன்னாலும் சீக்கிரமா ஏற்பாடு பண்ணுடா” என்றான் வேண்டுவது போல.
“சரி நீ குளிச்சிட்டு வா, நான் அப்பாட்ட பேசிட்டு வாறன்,” என்றபடி வெளியே விரைந்தான்.
குளித்து முடித்து ஆயத்தமாகி வெளியே வந்த காங்கேசன், சாப்பாட்டு மேசையில் தனக்காக காத்திருந்த நண்பனின் குடும்பத்தை கண்டதும் புன்னகையுடன் விரைந்து வந்தான்.
“வா ---வா---வந்து உட்காரப்பா” என அன்பு ததும்ப வரவேற்ற இசையாளனின் தந்தையார், “என்னப்பா உடனே போகணும்னு சொன்னியாமே?” என்றார்.
“ஆமாப்பா, நான் வந்த அலுவலை முடிச்சிட்டா, அப்புறமா வந்து ஊரெல்லாம் சுத்திப்பாக்கலாம்” என்றான்.
“மகன் எனக்கு ஏகப்பட்ட வேலை இருக்கிறதால என்னால வரமுடியல்ல, ஒன்றும் குறையில்லையே” என்றார்.
“இல்லப்பா” அவசரமாய் மறுத்தான் காங்கேசன்.
“உன்னோட ஐடி எல்லாத்தையும் கவனமா எடுத்துக்கொள், நீயும் இசையாளனும் கவனமா போயிட்டு வாங்க” என்றார்.
“சரிப்பா, ரொம்ப நன்றி” மகிழ்ச்சியுடன் கூறிவிட்டுத் திரும்பிய போது இசையாளனின் முகத்திலும் பூரிப்பு நிறைந்திருந்தது. இசையாளன் கூட இதுவரை இலங்கையின் வடபகுதிக்குச் சென்றதே இல்லை. அவனுக்கும் இதுவே வடபகுதிக்கான முதல் பயணம் என்பதே மகிழ்வைக் கொடுத்தது.
யுத்தத்தில் சிக்குண்டு சின்னாபின்னமான மக்களின் அவலங்களை ஊடகங்கள் ஊடாக பார்த்து மனம் கொதித்து வேதனைப்பட்டிருக்கிறான். இரத்த ஆறு பெருக்கெடுத்த அந்த மண்ணை, மரணவாயிலுக்குச் சென்றுதிரும்பிய மக்களைக் காணவேண்டும் என்ற பேராவல் அவனது மனதிலும் பரவிக்கிடந்தது. அந்த எண்ணத்தை நிறைவேற்ற இந்தப்பயணம் துணை புரிந்திருக்கிறது. இல்லாவிட்டால் அங்கு செல்ல தந்தை ஒருபோதும் அனுமதித்திருக்கமாட்டார். நன்றி ததும்பிய விழிகளால் நண்பனைப் பார்த்தான்.
பத்து மணியிருக்கும் அவர்களின் பயணம் ஆரம்பமானது.
இசையாளனின் வீட்டினரிடம் விடைபெற்று இருவரும் புறப்பட்டனர். இருவரும் யாழ்ப்பாணம் நோக்கிய வீதியில் பயணித்துக் கொண்டிருந்தனர். ஆங்காங்கே தெரிந்த மலைகளும் குன்றுகளும் இலங்கையின் இயற்கை வனப்பை கட்டியம் கூறியது. மௌனமாக வாகனத்தைச் செலுத்திய நண்பனின் சிந்தனையைக் கலைக்க விரும்பாத காங்கேசன் இருக்கையில் சாய்ந்து அமர்ந்துகொண்டான். வீதியின் இருமருங்கிலும் வாகனங்கள் வேகமாக அசைந்து ஓடுவது போன்று தென்பட்டது, அதைவிட வேகமாக ஓடியது அவனது நினைவுகள். மனம் துவளும் போதெல்லாம் எண்ணி எண்ணி ஆனந்தப்பட்டு மனதைத் தேற்றிய அந்த நினைவுகளை மீண்டும் மீட்டிக்கொண்டான்.
இராமேஸ்வரம் தனுஸ்கோடிதான் அவனது பிறப்பிடம் வாழ்விடம் எல்லாமே.
தொடரும்



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.