உச்ச நீதிமன்றம் குறித்து தலைமை வழக்கறிஞர் பயம்

சபரிமலை கோயிலில் அனைத்து
வயதுப் பெண்களையும் அனுமதித்துத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற முடிவுக்குக் கண்டனம் தெரிவித்த மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், இது போன்ற தீர்ப்புகளினால் உச்ச நீதிமன்றம் நம் நாட்டின் மூன்றாவது நாடாளுமன்ற அவையாக மாறும் என்ற பயம் ஏற்படுவதாகக் கூறினார்.
நேற்று (டிசம்பர் 9) டெல்லியில் நடைபெற்ற ஜே தாதசஞ்ஜி நினைவு இரண்டாம் ஆண்டு விவாதத்தில் கலந்துகொண்டார் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால். அப்போது, உச்ச நீதிமன்றத்தின் சமீபகால நடைமுறைகள் குறித்து விமர்சித்துப் பேசினார். அடிப்படைக் கட்டமைப்பு, அரசியலமைப்பு நெறிமுறைகள் போன்றவற்றைப் பயன்படுத்தி சட்டங்கள் செல்லுபடியாவதை மதிப்பிடுவதாகவும், அரசியலமைப்பைத் தாண்டி அதன் நிலையை விரிவுபடுத்துவதாகவும் குற்றம்சாட்டினார். சபரிமலை கோயில் சம்பந்தப்பட்ட தீர்ப்பு உட்படப் பல்வேறு தீர்ப்புகளில் அரசியலைமைப்பு நெறிமுறைகள் சார்ந்து நீதித் துறையின் முடிவுகள் அமைந்திருப்பது அபாயகரமானது என்று தெரிவித்தார்.
“அரசியலமைப்பு நெறிமுறைகளைப் பயன்படுத்துவது மிக மிக அபாயகரமானது; அது நம்மை எங்கு கொண்டுசெல்லும் என்பதை உறுதி சொல்லவே முடியாது. இதனால் அரசியலமைப்பு நெறிமுறைகள் மடியும் என்று நம்புகிறேன் அல்லது உச்ச நீதிமன்றம் நம் நாட்டின் மூன்றாவது நாடாளுமன்ற அவையாக மாறும் என்று நமது நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு சொன்னது உண்மையாகும்” என்று தெரிவித்தார் வேணுகோபால். அதே நேரத்தில், இது தனிப்பட்ட கருத்து என்றும் அவர் தன் பேச்சில் குறிப்பிட்டார்.
வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு இந்தியாவில் உச்ச நீதிமன்றத்துக்கு அதிக அதிகாரம் கொடுக்கப்பட்டதாகக் கூறினார். “சபரிமலை வழக்கில் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் நாம் தலையிட முடியாது என்று ஒரு நீதிபதி கூறுகிறார். ஆனால் மற்ற நான்கு நீதிபதிகளும் அரசியலமைப்பு நெறிமுறைகளின் அடிப்படையில் இதனை அணுகுவதாகத் தெரிவிக்கின்றனர். தனிநபருக்காக அல்ல, ஒட்டுமொத்த மக்களுக்கும் சேர்த்து நீங்கள் இந்த வழக்கைக் கையாள்கிறீர்கள். மதம் சார்ந்த நம்பிக்கைகளில் தலையிடும்போது உச்ச நீதிமன்றம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவ்வாறு தலையிடாவிட்டால் இந்த நாடு சபிக்கப்பட்டதாக மாறும் என்று நீதிமன்றம் நம்புவது சரியல்ல” என்று அவர் பேசினார்
Powered by Blogger.