திருவண்ணாமலை: மூக்குப்பொடி சித்தர் மரணம்!

வயது முதிர்வினால் உடல் நலிவுற்றிருந்த திருவண்ணாமலை மூக்குப்பொடி சித்தர் இன்று
அதிகாலையில் மரணமடைந்தார்.

சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னதாக, திருவண்ணாமலை பகுதிக்கு இடம்பெயர்ந்தவர் மூக்குப்பொடி சித்தர். இவரது இயற்பெயர் மொட்டையக் கவுண்டர் என்று கூறப்படுகிறது. இவர், சேலம் மாவட்டம் கிழக்கு ராஜபாளையம் கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். மனைவியின் மரணத்துக்குப் பிறகு, இவர் ஆன்மிகத்தை நாடினார். இதனால், தனது ஒரே மகன் குடும்பத்தை விட்டு விலகித் தனியே வந்துவிட்டார். இவர் மூக்குப்பொடி விரும்பிப் பயன்படுத்துவார் என்றும், அதனால் அந்த பெயர் அவரோடி ஒட்டிக்கொண்டது என்றும் சொல்லப்படுகிறது.

பல நாட்கள் உணவு உண்ணாமல் இருக்கும் இவர், திடீரென்று சாப்பிடத் தொடங்குவார். இயற்கைச் சீற்றங்களின்போது, அது பற்றி முன்னரே எடுத்துரைப்பார் என்று கூறப்படுகிறது. தானே புயல், கூடங்குளம் போராட்டம், மத்திய அரசின் பண மதிப்பழிப்பு நடவடிக்கை குறித்தும் இவர் முன்கூட்டியே கணித்துச் சொன்னதாகத் தகவல் வெளியானது. அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் ரங்கசாமி, ஆளுநர் கிரண் பேடி, நடிகர் ரஜினிகாந்த், இளையராஜா உட்படப் பல பிரபலங்கள் இவரைத் தேடி வந்து சந்தித்துள்ளனர். இவரது அனுமதி இல்லாமல், யாரும் இவரைச் சந்திக்க முடியாது என்று கூறப்படுவதுண்டு. திருவண்ணாமலை கிரிவலப்பாதை, காந்தி சிலை அருகிலுள்ள சன்னியாசி மடத்தில் அமர்ந்து இவர் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார்.
வயது முதிர்வு காரணமாக, சமீபகாலமாக உடல் மெலிந்து இருந்தார் மூக்குப்பொடி சித்தர். இவருக்கு சேஷாத்திரி ஆசிரமத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், இன்று (டிசம்பர் 9) அதிகாலை 5 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில், சேஷாத்திரி ஆசிரமத்தில் வைக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.