போலிச் செயலிகளுக்கு செக் வைத்த கூகுள்

கூகுள் நிறுவனம், அதன் ப்ளே ஸ்டோர் தளத்திலிருந்து 22 செயலிகளை
அதிரடியாக நீக்கியுள்ளது.
ஆண்டராய்டு பயனர்களுக்குத் தேவையான பெரும்பாலான செயலிகளை இலவசமாக வழங்கிவரும் கூகுள் நிறுவனம், தீங்கிழைக்கும் வைரஸ் இருப்பதாகக் கூறி ப்ளே ஸ்டோரிலிருந்து 22 செயலிகளை அதிரடியாக நீக்கியுள்ளது. ARS டெக்னியாவிடமிருந்து கிடைத்த தகவலின்படி, கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து இந்த 22 செயலிகளும் 2 மில்லியன் முறை பயனர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. அதில் கடந்த ஆண்டு அறிமுகமான 'ஸ்பார்கிள் ஃபிளாஷ் லைட்' எனும் ஃபிளாஷ் லைட்டிற்கான செயலி மட்டும் ஏறத்தாழ 1 மில்லியன் முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கூகுள் ப்ளே ஸ்டோரில் இருக்கும் ஒருசில செயலிகள், பயனர்களுக்குத் தெரியாமலேயே சர்வரிலிருந்து அவர்களது தகவல்களை திருடி விடுவதாக சோபோஸ் எனும் ஆன்டிவைரஸ் நிறுவனம் அதன் பிளாக்ஸ்பாட் பதிவில் கூறியுள்ளது.
இதுகுறித்து சோபோஸ் வெளியிட்டுள்ள பிளாக்ஸ்பாட் பதிவில், "Andr/Clickr-ad என்ற வைரஸானது பயனர்களுக்கு மட்டுமின்றி ஆண்டராய்டு குடும்பத்திற்கே ஆபத்தான ஒன்றாகும். சில போலியான செயலிகளை பயனர்கள் உபயோகிக்கையில் இந்த வைரஸ்கள் அவர்களுக்கு தெரியாமலேயே அவர்களது மொபைலில் ஆக்டிவேட் ஆகிவிடும். இது அவர்களின் போனின் பேட்டரித் திறனை மட்டுமின்றி அவர்களின் இன்டர்நெட் டேட்டாவையும் மழுங்கச் செய்துவிடும். பின்னர் அவர்களது போன் முழுவதும் ஹேக்கர்களின் கட்டுப்பாட்டிற்குள்வந்துவிடும்" என்று தெரிவித்துள்ளது.
Powered by Blogger.