சமூகச் செயற்பாட்டாளர் கவுசல்யா திருமணம்

சங்கர் சமூக நீதி அறக்கட்டளையின்
சார்பாகத் தொடர்ச்சியாகச் சமூகப் பிரச்சினைகளுக்காகப் போராடிவரும் உடுமலைப்பேட்டை கவுசல்யா, இன்று (டிசம்பர் 9) கோயம்புத்தூரைச் சேர்ந்த சக்தி என்பவரை மறுமணம் செய்துகொண்டார்.
தனியார் பொறியியல் கல்லூரியில் படித்தபோது, உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் என்பவரைக் காதலித்தார் கவுசல்யா. இவர், பழனியைச் சேர்ந்தவர். சங்கர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஆதிக்க சாதியைச் சேர்ந்த கவுசல்யாவின் பெற்றோர் இந்தக் காதலை ஏற்கவில்லை. இதை மீறி, 2016ஆம் ஆண்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர். 2016 மார்ச் 13இல், உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம் அருகே இருவர் மீதும் மூன்று நபர்கள் பயங்கரமான ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் நடத்தினர். கொடூரமாகத் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே சங்கர் பலியானார். படுகாயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் கவுசல்யா.
சில மாத சிகிச்சைக்குப் பிறகு, அவரது உடல்நலம் சீரானது. இதன்பின், தன்னைப் போன்று யாரும் ஆணவப் படுகொலைகளுக்குப் பலியாகிவிடக் கூடாது என்று செயல்படத் தொடங்கினார் கவுசல்யா. சங்கர் சமூக நீதி அறக்கட்டளையை நிறுவி, சமூக விழிப்புணர்வுக்கான நிகழ்வுகளில் பங்கேற்று வந்தார். உடுமலைப்பேட்டை சங்கரின் சகோதரர்கள் கல்வி கற்க உதவப் போவதாகவும் தெரிவித்திருந்தார். சமீபத்தில் தெலங்கானா மாநிலத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட பிரனய் ஆணவப் படுகொலை செய்யப்பட்டார். இதில் தனது தந்தை மாருதிராவ் சம்பந்தப்பட்டுள்ளதாக பிரனய்யின் மனைவி அம்ருத்வர்ஷினி தெரிவித்தார். அவரை மருத்துவமனையில் சென்று நேரில் சந்தித்த கவுசல்யா, இந்தியச் சமூகத்தில் ஆணவப் படுகொலை பற்றி விவாதித்ததாகத் தெரிவித்தார்.
சமூகச் செயற்பாட்டாளரான கவுசல்யா, இன்று கோவையில் சக்தி என்பவரை மறுமணம் செய்துகொண்டார். இவர், நிமிர்வு பறை இசைக் குழுவை நடத்தி வருகிறார். சக்தியிடம் தான் கவுசல்யா பறை இசை கற்றுக்கொண்டதாகக் கூறப்படுகிறது. கோவை பெரியார் படிப்பகத்தில் நடந்த இந்தத் திருமணத்தில் கவுசல்யா, சக்தியின் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டனர்.
திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிடக் கழகப் பொதுச்செயலாளர் கு.ராமகிருஷ்ணன், வன்னி அரசு, சமூகச் செயற்பாட்டாளர் எவிடன்ஸ் கதிர் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.