யார் இந்த கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்?

ஒன்றிய அரசின் புதிய தலைமைப் பொருளாதார ஆலோசகராக டிசம்பர்
7ஆம் தேதி நியமிக்கப்பட்டுள்ள கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் குறித்து இங்கு காணலாம்.

கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் 1978ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். ஐஐடி கான்பூரில் மின்னியல் மற்றும் மின்னணு பொறியியல் துறையில் பிடெக் பட்டமும், கொல்கத்தா ஐஐஎம்-இல் எம்பிஏ பட்டமும் பெற்றுள்ளார். அப்போது தனது படிப்புக்காக தங்கப் பதக்கமும் பெற்றுள்ளார். அதன் பிறகு அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள பூத் ஸ்கூல் ஆஃப் பிசினஸில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். அதுமட்டுமின்றி, இவர் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநரான ரகுராம் ராஜனின் மாணவருமாவார். 2015ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வில் ரகுராம் ராஜனுடன் இணைந்து இவரும் பங்கேற்றிருந்தார்.
40 வயதாகும் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்தான் இந்தியாவில் மிகச் சிறிய வயதில் தலைமைப் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்படும் முதல் நபர். கல்வித் துறையில் ஒன்பது ஆண்டு காலம் அனுபவம்கொண்ட இவர், பல்வேறு ஆய்வுகளை வெளியிட்டுள்ளார். நிதித் துறை, பெருநிறுவன ஆளுகை மற்றும் பொருளாதார கொள்கைகள் வகுப்பதில் சிறந்த அனுபவம் கொண்டவர். அத்துறைகள் சார்ந்து பல்வேறு ஆய்வுக் கட்டுரைகளையும் இவர் எழுதியுள்ளார்.

பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியின் நிலைக் குழுவுக்கு முதன்மைச் சந்தை, இரண்டாம் நிலை சந்தைகள், மாற்று முதலீடு மற்றும் ஆராய்ச்சிகளில் தனது சேவைகளை வழங்கியுள்ளார். பல்வேறு சர்வதேசப் பத்திரிகைகளிலும் இவரது ஆய்வுகள் வெளியாகியுள்ளன. பல்வேறு வெளியீடுகளும் இவரது பெயரில் வெளியாகியுள்ளன. பந்தன் வங்கி வாரியத்திலும் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். அமெரிக்காவில் உள்ள ஜேபி மோர்கன் நிறுவனத்தில் கன்சல்டண்டாகவும், ஐசிஐசிஐ ஆராய்ச்சி குழுமத்தில் பகுதி நேர ஆய்வாளராகவும் பணியாற்றியுள்ளார்.
தற்போது இந்தியாவின் முன்னணி வணிகக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹைதராபாத் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸில்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். உலகின் முதன்மையான 100 பாத்-பிரேக்கிங் ஆய்வு நிறுவனங்களில் இந்தியாவில் இடம்பெற்றுள்ள ஒரே கல்வி நிறுவனம் ஹைதராபாத் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்ஆகும். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு இந்திய அரசின் தலைமைப் பொருளாதார ஆலோசகராகக் கிருஷ்ணமூர்த்தி பதவியில் நீடிக்கவுள்ளார்.

No comments

Powered by Blogger.