தோனியை விளாசிய காம்பீர்

2012ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில்
நடைபெற்ற முத்தரப்பு தொடரின்போது அப்போதைய இந்திய அணியின் கேப்டன் தோனி எடுத்த முடிவு குறித்து கவுதம் காம்பீர் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக வலம்வந்த காம்பீர், அனைத்து விதமான போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இடக்கை வீரரான இவர் தற்போது ரஞ்சிக் கோப்பைத் தொடரில் டெல்லி அணிக்காகத் தன் கடைசிப் போட்டியில் ஆடிவருகிறார். போட்டியின்போது செய்தியாளர்களிடம் பேசிய காம்பீர், 2012ஆம் ஆண்டு இந்திய அணி வெளிநாட்டு மண்ணில் வெற்றிகளைக் குவிக்கப் போராடி வந்த காலகட்டத்தில், அப்போதைய கேப்டன் மகேந்திர சிங் தோனி, அணியில் இருந்த சீனியர் வீரர்களுக்குப் பதில் இளம் வீரர்களுக்கே அதிக வாய்ப்பளித்துவந்ததாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்துப் பேசிய அவர், “2012 ஆம் ஆண்டு CB முத்தரப்பு தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்தது. 2015ஆம் ஆண்டு நடக்கவிருந்த உலகக் கோப்பை தொடரை கருத்தில்கொண்டு CB தொடரில் இருந்தே என்னையும் சச்சின், சேவாக் ஆகியோரையும் ஒரே அணியில் களமிறக்கப் போவதில்லை என்ற முடிவை கேப்டன் தோனி எடுத்தார். அது எனக்கு மிகவும் பேரதிர்ச்சியாக இருந்தது. எனக்கு மட்டுமல்ல; அணியில் இருந்த அனைவருக்கும் அது அதிர்ச்சியாகத்தான் இருந்தது. 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் நாங்கள் யாரும் இருக்கப்போவதில்லை என்பதை அப்போது நாங்கள் யாரும் அறிந்திருக்கவில்லை. அதுவரையில் அணியில் விளையாடத் தொடர்ந்து ரன் குவித்தால் மட்டும் போதும். வயது ஒரு விஷயமல்ல என்ற போக்கில் இருந்தேன்” என்று கூறியுள்ளார்.
2012ஆம் ஆண்டு CB தொடரின் முக்கிய போட்டி ஒன்றை நினைவுகூர்ந்த காம்பீர், “அந்தத் தொடரில் ஹோபர்ட்டில் நடைபெற்ற கட்டாயமாக வெல்ல வேண்டிய முக்கிய போட்டி ஒன்றில் சச்சின், சேவாக் தொடக்க வீரர்களாகக் களமிறங்கினர். நானும் கோலியும் மூன்றாவது மற்றும் நான்காவது நிலையில் களமிறங்கினோம். அந்தப் போட்டியில் இந்திய அணி டார்கெட்டை 37 ஓவர்களில் சேஸ் செய்தது. அந்தத் தொடரில் அந்தப் போட்டிக்கு முன்பு நாங்கள் மூவரும் (காம்பிர், சச்சின், சேவாக்) ஒரே அணியில் விளையாடவில்லை. சுழற்சி முறையில் மாற்றி மாற்றிக் களமிறக்கப்பட்டோம். அந்தத் தொடரில் தோனியின் இந்த முடிவு எங்களுக்குப் பேரதிர்ச்சியாக இருந்தது” என்று கூறினார்.
2012ஆம் ஆண்டு CB தொடரில் இந்திய அணி பங்கேற்ற எட்டுப் போட்டிகளில் வெறும் மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. தோனியின் தலைமையிலான அந்த அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.