பேட்ட: வெறித்தனம் ஓவர்லோடட்

பேட்ட இசை வெளியீட்டு விழா அதன் உண்மையான மகிழ்ச்சியை
ரசிகர்களுக்கு கொடுக்கவில்லை என்பதைச் சொல்லியே ஆக வேண்டும். முழுக்க முழுக்க ரஜினி வெறியர்களால் உருவாக்கப்பட்ட ஒரு திரைப்படத்தில் என்ன நடந்தது என்பதைப் பற்றி யாருமே சொல்லவில்லை. மேடையேறிய அனைவருமே, இதற்கு முன்பு ரஜினியை எப்படி வியந்தார்கள்; எப்படி சந்தித்தார்கள் என்பது குறித்து மட்டுமே பேசிவிட்டுச் சென்றனர். பேட்ட படத்தில் என்ன நடைபெற்றது என்பதைக் கூற யாருக்கும் நேரம் கொடுக்கப்படவே இல்லை.
நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியவர்களும் மேலே சொல்லப்பட்ட குறைக்கு முக்கியக் காரணம் எனலாம். கிடைப்பதற்கரிய இம்மேடையில் என்ன பேச வேண்டும் என ரஜினியுடன் பணியாற்றத் தொடங்கியதிலிருந்து திட்டமிட்டு வைத்திருந்ததை எல்லாம் பேசுவதற்கு நேரம் கொடுக்காமல், குறிப்பிட்ட சில கேள்விகளுக்குள் அவர்களைச் சுருக்கி நேரத்தை வீணாக்கிவிட்டு, கடைசியில் சில நொடிகளில் அவர்களது மனதில் இருப்பதைப் பேசச் சொன்னது ஏமாற்றம்தான். அப்போதும் கொஞ்சம் நேரம் கேட்டு தங்களது மனதில் இருப்பதை கலைஞர்கள் பேசி முடித்ததும், சற்றுமுன் பேசியதையே மீண்டும் ஒரு கேள்வியாகக் கேட்டது, நிகழ்ச்சித் தொகுப்பாளராக அனுபவமில்லாமல் விழா ஏற்பாட்டாளர்கள் கொடுத்த கேள்விகளை ஒப்பித்துவிட்டுச் சென்றதையே காட்டியது. இதற்கப்பால், கொஞ்சம் நான் பேசணும் என நடிகர்கள் நேரம் கேட்டுப் பேசியதெல்லாமே பட்டாசு ரகம்.
ரஜினி ரசிகர் மன்றத்தில் கார்த்திக் சுப்பராஜ் உறுப்பினராக இல்லையென்றால், எந்த டாகுமெண்டும் இல்லாமல் அவரை மன்றத்தில் சேர்த்துவிட்டுத்தான் அடுத்த வேலையைப் பார்ப்பார்கள் ரஜினி ரசிகர்கள். அந்தளவுக்கு ஒரே பேச்சில் அனைவரது மனதிலும் கார்த்திக் இடம்பிடித்துவிட்டார். ரஜினியை ஒருவர் இந்தளவுக்கு ரசிக்க முடியுமா’ என்று ரசிகர்களுக்கே ஆச்சரியம் ஏற்படும் அளவுக்கு இருந்தது கார்த்திக்கின் பேச்சு. ‘என்னை 80கள் மற்றும் 90களுக்கே கார்த்தி அழைத்துச் சென்றுவிட்டார். அந்தப் படத்தில் இப்படி செய்வீங்களே, அந்த மாதிரி பண்ணுங்க என்றெல்லாம் சொல்லிச் சொல்லி நடிக்கவைத்தது எனக்கே ஒரு புது அனுபவமாக இருந்தது’ என்று ரஜினி பேசியது கார்த்திக் இந்தப் படத்தில் என்ன செய்திருக்கிறார் என்பதற்கு முழுச் சான்று.
விஜய் சேதுபதிதான் இந்த விழாவின் நடுநாயகம் என்று சொல்லலாம். விஜய் சேதுபதி வில்லனா அல்லது நவாசுதீன் சித்திக் வில்லனா என்ற கேள்விக்கு விஜய் சேதுபதிதான் என்ற பதிலை அவரே சொல்லிவிட்டார். ஆனால், ஹீரோவான ரஜினியும், வில்லனான விஜய் சேதுபதியும் சேர்ந்து பொறாமைப்படும் அளவுக்கு நவாசுதீனின் நடிப்பு அதகளப்படுத்தியிருக்கிறது படத்தில். பேச அழைத்தபோது நவாசுதீனுக்கு நெகிழ்ச்சி மட்டும் ஏற்படவில்லை. கொஞ்சம் அயர்ச்சியும் இருந்தது பேச்சிலேயே தெரிந்தது. இந்த விழாவுக்குச் செலவு செய்த பணத்தில் ஐந்து படங்களை எடுத்துவிட்டிருப்பேன் நான் எனச் சொல்வது போல இருந்தது அவர் செயல். என்ன சார் பண்றது, இதெல்லாம் தமிழ் சினிமாவின் வரமா சாபமா என்பதே தெரியவில்லையே.
ரஜினியைப் பொறுத்த வரையில், கேரக்டர்களுக்காக எவ்வித சமரசமும் செய்யாமல் முழுக்க முழுக்க ரசிகன் கைதட்ட வேண்டும், கொண்டாட வேண்டும் என்பதை மட்டும் கவனத்தில் வைத்து எடுக்கப்பட்ட படம் என்பது அவர் எண்ணம். ஒவ்வொரு கேரக்டரையும் கார்த்திக் சுப்பராஜ் சொல்லும்போது நடிப்பார்களா என ரஜினி கேட்டதும் ‘நீங்க கவலையை விடுங்க சார்’ எனச் சொல்லி, ஒவ்வொரு நடிகனுக்குள்ளும் இருக்கும் ரஜினி ரசிகனைத் தட்டி எழுப்பி ‘தலைவரோட நடிக்க கதை கேட்கணுமா’ எனச் சொல்ல வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார். கஜா புயலுக்கு அரசாங்கத்தை மட்டும் நம்பாமல் பணக்கார மக்களும் உதவ வேண்டும் என்னும் கோரிக்கை, எந்திரன் டிராப் ஆனபோது கலாநிதி மாறன் காப்பாற்றியது, எந்திரன் படத்தின் லாபத்திலிருந்து ஒரு கோடி ரூபாயை கலாநிதி மாறன் கொடுத்தது, எந்திரன் எடுக்கப்பட்டதால் இன்று உருவான 2.0 வெற்றி பெற்றது, கலாநிதி மாறனுக்கான நன்றிக்கடன் என ஒவ்வொன்றாக முடித்துவிட்டுக் கடைசி கட்டத்துக்கு ரஜினியின் பேச்சு வந்தபோது பலரும் ஆரவாரத்துடன் காத்திருந்தனர். ஆனால், ‘என் பிறந்தநாளுக்கு நான் ஊரில் இருக்க மாட்டேன். எனவே இது ஏமாற்றமாக இருந்தால் என்னை மன்னித்துவிடுங்கள்’ என்று ஒரு வெடியை வீசிச் சென்றார் ரஜினி. ஆனால், ரசிகர்கள் அசர மாட்டார்களே. பிறந்தநாளன்று தலைவரைப் பார்க்க வீட்டுக்குப் போகாமல், இம்முறை தியேட்டருக்குச் சென்றுவிடுவோம் என சமூக வலைதளங்களில் பரப்புரை செய்யத் தொடங்கிவிட்டனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.