எழுவர் விடுதலை: மத்திய அரசு புதிய மனு!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில், மத்திய
அரசு புதிய மனு ஒன்றை இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எழுவரை விடுதலை செய்ய ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது தமிழக சட்டப்பேரவையில் 2014ஆம் ஆண்டு பிப்ரவரியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக மத்திய அரசுக்குத் தமிழக அரசு கடிதம் எழுதியது. இக்கடிதத்தை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கில், எழுவரை விடுவிப்பது தொடர்பாக ஆளுநர் பரிசீலிக்கலாம் என்று உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு எழுவரை விடுவிக்குமாறு தமிழக அமைச்சரவை பரிந்துரை செய்தது. சமீபத்தில் பிரதமரை ஆளுநர் சந்தித்து வந்தார். அப்போது எழுவர் விடுதலைத் தொடர்பாக விவாதித்ததாகத் தெரிகிறது.
இதற்கிடையில் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டோரின் குடும்பங்களை சேர்ந்த, அப்பாஸ் உள்ளிட்டோர் சார்பில் 2014ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது. எழுவர் விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தாக்கல் செய்யப்பட்ட அந்த மனு தொடர்பாக பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில் ஆளுநர் பிரதமரைச் சந்தித்த சில தினங்களில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றை இன்று (டிசம்பர் 10) தாக்கல் செய்துள்ளது. அதில், எழுவர் விடுதலைக்கு எதிராகப் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த ரிட் மனுவைக் காலாவதியான மனுவாக அறிவிக்க வேண்டும் என்று கோரியுள்ளது.
மேலும், எழுவர் விடுதலைத் தொடர்பாக மத்திய அரசிடம் எந்த மனுவும் நிலுவையில் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளது
Powered by Blogger.