நோய் தொற்றிலிருந்து மீண்டு வந்த காஜல்

காஜல் அகர்வால் தனது உடலில் ஏற்பட்ட
சில பிரச்சினைகள் காரணமாக படங்களில் நடிப்பதைச் சிறிது தவிர்த்து வந்தார். சிறிய இடைவேளைக்குப் பின் மீண்டும் படங்களில் நடிக்க தற்போது கதைகளைக் கேட்டுவருகிறார்.
தமிழில் விஜய் நடித்த மெர்சல் திரைப்படத்திற்குப் பின் காஜல் அகர்வால் நடித்த வேறெந்த படமும் வெளியாகவில்லை. இந்தியில் வெளியான குயின் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்துமுடித்துள்ளார். இறுதிக்கட்டப் பணிகள் நடைபெறும் அந்தப் படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. தெலுங்கில் இந்த ஆண்டு அவர் நடிப்பில் இரு படங்கள் வெளியாகின. ‘அவ்’ படத்தில் நடிக்கும் போது நோய் எதிர்ப்பு சக்தி தொடர்பான பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தார். இதனால் சில மாதங்கள் ஓய்வில் இருந்த அவர் தன்னுடைய உடல்நிலை குறித்தும் அடுத்தகட்ட திட்டமிடல் குறித்தும் ஃபர்ஸ்ட் போஸ்ட் தளத்திற்கு பேட்டியளித்துள்ளார்.
“நான் ஒப்புக்கொண்ட முந்தைய படங்களில் இந்த ஆண்டு பணியாற்ற முடிவெடுத்துள்ளேன். அதோடு என் உடல்நிலையிலும் கவனம் செலுத்தவுள்ளேன். ‘அவ்’ படத்தில் நடிக்கும் போது நான் மிகவும் பாதிக்கப்பட்டேன். கடவுள் தான் எனக்கு இந்த இடைவேளையைக் கொடுத்துள்ளார். நோய் எதிர்ப்பு தொடர்பான பிரச்சினை (autoimmune disease ) இருப்பது எனக்கு நீண்ட நாள்கள் தெரியாது. எனக்குள் என்ன நடக்கிறது என்பது தெரியாமலே நான் மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்டேன். ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைப் பின்பற்றினேன். ஆனால் சொல்லமுடியாத காய்ச்சலால் தினமும் மாலை அவதிப்பட்டேன். இது என்னை மிகுந்த அழுத்தத்திற்கு ஆளாக்கியது. இப்போது முழுவதுமாக குணமடைந்துவிட்டேன்” என்று காஜல் கூறியுள்ளார்.
தான் தேர்வு செய்யும் படங்கள் குறித்துப் பேசிய காஜல், “எனது முழு நோக்கமும் இந்த ஆண்டு சுவாரஸ்யமான திரைக்கதைகளைத் தேர்வு செய்வதாக இருக்கும். என்னுடைய படங்களின் பட்டியலை விரிவாக்க வேண்டும். கமர்ஷியல் படங்களையும் எப்போதும் போலவே செய்யவேண்டும். எந்த வகையான படங்கள் என்றாலும் எனது கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் உள்ளதா என்பதைப் பார்ப்பேன். நான் இருக்கும் இந்த இடத்தை மிக மகிழ்வாக உணர்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்
Powered by Blogger.