அபர்னாவின் ‘பயோ பிக்’ ஆசை!

8 தோட்டாக்கள் திரைப்படம் மூலம்
தமிழ்த் திரையுலகில் அறிமுகமான அபர்னா முரளி தற்போது ஜீ.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடித்துள்ள சர்வம் தாளமயம் படத்தை எதிர்பார்த்துள்ளார். 18 ஆண்டுகளுக்குப் பின் ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன் இயக்கியுள்ள இந்தப் படம் டிசம்பர் 28ஆம் தேதி வெளியாகவுள்ளது.
ஒவ்வொரு நடிகர் நடிகைக்கும் குறிப்பிட்ட பாணி படங்கள், கதாபாத்திரங்களில் நடிப்பதற்கான விருப்பம் இருக்கும். தான் தேர்வு செய்யும் கதாபாத்திரங்கள் தான் நடிக்க விரும்பும் படங்கள் குறித்து அபர்னா டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
“வழக்கமான கதாநாயகிக்கான பாத்திரங்கள் போல் அல்லாமல் வித்தியாசமான கதாபாத்திரங்களையே தேர்வு செய்து நடிக்கவிரும்புகிறேன். ரசிகர்கள் நான் துணிச்சலான கதாபாத்திரத்தில் நடிப்பதாகக் கூறுகிறார்கள். ஆனால் ஒவ்வொரு கதாபாத்திரமும் துணிச்சலுடன் செயல்படும் கதாபாத்திரமாக இருக்கும் எனச் சொல்ல முடியாது. நான் ரொமண்டிக் படங்களில் நடித்ததில்லை. அது மிகவும் கடினமாக இருக்கும் என நினைக்கிறேன். ஆனால் பயோபிக் படங்களில் நடிக்க விரும்புகிறேன். குறிப்பாக வெளியே தெரியாமல் போன புகழ்பெற்ற மனிதர்களின் கதைகளில் நடிக்க ஆசை. சமீபத்தில் வெளியான நடிகையர் திலகம் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கீர்த்தி சுரேஷ் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். அந்த கதாபாத்திரத்திற்காக கடுமையாக உழைத்திருந்தார்” என்று அபர்னா கூறினார்.
சர்வம் தாளமயம் படம் குறித்துப் பேசிய அவர், “இந்தப் படத்தை பொறுத்தவரை ஒவ்வொருவரின் கதாபாத்திரமும் அவர்கள் சார்ந்த துறையின் பின்னணியில் உருவாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ், நெடுமுடி வேணு ஆகியோர் என்ன மாதிரியான பணிகளை மேற்கொண்டுள்ளனர் என்பது நமக்குத் தெரியும். படப்பிடிப்பு நிறைவடைந்த பின்னர் நானும் ஜி.வியும் நண்பர்களாக மாறிவிட்டோம். ராஜிவ் மேனன் அவரது மனைவி லதா, மகள் சரஸ்வதி ஆகியோர் எனக்கு ஏற்கெனவே அறிமுகமாகியிருப்பதால் படக்குழு எனக்கு ஒரு குடும்பம் போல் இருந்தது” என்று கூறியுள்ளார்.

No comments

Powered by Blogger.