அரை சதம் அடித்த ஹன்சிகா

ஹன்சிகா நடிக்கும் 50ஆவது படத்தின்
படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது.
முன்னணி நடிகைகள் பலரும் முன்னணி கதாநாயகர்கள் நடிக்கும் படங்களில் நடித்தாலும் பிரதான கதாபாத்திரத்தில் நடிப்பதையும் ஒருபக்கம் தொடர்ந்து வருகின்றனர். ஹன்சிகா நடிப்பில் சமீபகாலமாக வெளிவந்த படங்கள் பெரியளவில் வரவேற்பு பெறவில்லை. பிரபு தேவாவுடன் அவர் இணைந்து நடித்த குலேபகாவலி படம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த போதும் கவனம் ஈர்க்கவில்லை. இந்நிலையில் அவர் நடிப்பில் இந்த வாரம் வெளியாக உள்ளத் துப்பாக்கி முனை படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதர்வா நடிக்கும் ‘100' படத்திலும் இணைந்து நடித்து வருகிறார்.
இந்தித் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஹன்சிகா தற்போது ஐம்பதாவது படத்தில் நடித்து வருகிறார். மஹா எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் போஸ்டர் நேற்று (டிசம்பர் 9) வெளியானது. வாரணாசி பின்புலத்தில் ஹன்சிகா புகைபிடிப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ள அந்த போஸ்டர் விமர்சனங்களைச் சந்தித்து வருகிறது. சர்கார் திரைப்படத்தின் போஸ்டரில் இடம்பெற்ற விஜய் புகைபிடிக்கும் காட்சி சமீபத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. அதைத் தொடர்ந்து இந்த போஸ்டர் வெளியாகியுள்ளது.
க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகும் மஹா திரைப்படத்தை யு ஆர் ஜமீல் இயக்குகிறார். இதன் படப்பிடிப்பு இன்று சென்னையில் தொடங்கியுள்ளது. சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. அதைத் தொடர்ந்து மதுரையில் சில காட்சிகளைப் படமாக்கவுள்ளனர். ஐரோப்பிய நாடுகளிலும் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது.
எக்ஸெட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜிப்ரான் இசையமைக்கிறார். இது அவர் இசையமைக்கும் 25ஆவது படமாகும். மேலும் ஜே.லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்கிறார், ஜான் அப்ரஹாம் படத்தொகுப்பாளராகப் பணியாற்றுகிறார்.

No comments

Powered by Blogger.