ரிசர்வ் வங்கி ஆளுநர் ராஜினாமா!

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பொறுப்பை உர்ஜித் படேல் ராஜினாமா செய்துள்ளார்.
ரகுராம் ராஜனுக்குப் பிறகு ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பொறுப்பை ஏற்று, தொடர்ந்து பணியாற்றி வந்த உர்ஜித் படேல் அப்பதவியை உடனடியாக ராஜினாமா செய்வதாக டிசம்பர் 10ஆம் தேதி (இன்று) அறிவித்துள்ளார். சொந்தக் காரணங்களுக்காகவே இந்த முடிவை மேற்கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். 2016ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் 4ஆம் தேதி இப்பொறுப்பை ஏற்ற உர்ஜித் படேல், 2019 செப்டம்பர் மாத இறுதி வரையில் தொடருவதாக இருந்த நிலையில் இந்த அதிரடி முடிவை அவர் மேற்கொண்டுள்ளார். முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் தனது பதவியை ஜூன் 19ஆம் தேதி ராஜினாமா செய்திருந்தார்.
இதுகுறித்து உர்ஜித் படேல் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “சொந்தக் காரணங்களுக்காக எனது பொறுப்பை உடனடியாக ராஜினாமா செய்கிறேன். ரிசர்வ் வங்கியின் செயல்பாட்டில் எனது சேவையை வழங்கியதில் மிகுந்த பெருமை கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், உர்ஜித் படேலின் இந்த திடீர் ராஜினாமா அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாஜக தலைவரும் பொருளாதார வல்லுநருமான சுப்ரமணியன் சுவாமி தனது ட்விட்டர் பதிவில், “உர்ஜித் படேலின் இந்த ராஜினாமா இந்தியப் பொருளாதாரத்துக்கும், ரிசர்வ் வங்கிக்கும், அரசுக்கும் கேடு விளைவிக்கக்கூடும். அவர் ஜூலை மாதத்தில் அடுத்த அரசு ஆட்சியமைக்கும் வரையாவது தனது பொறுப்பில் இருந்திருக்க வேண்டும். அவரது வெளியேற்றத்தின் காரணம் குறித்து பிரதமர் அவரை அழைத்துப் பேசி முடிவெடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டுள்ளார். உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்தால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கும் என்று நாடாளுமன்ற நிலைக்குழுத் தலைவரான வீரப்ப மொய்லியும் முன்பு கூறியிருந்தார்.
ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே அண்மைக்காலமாக மோதல் போக்கு அதிகரித்து வந்தது. ரிசர்வ் வங்கியின் சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடுவதாகவும், இது ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி உரிமையைப் பறிப்பதாகவும் சர்ச்சைகள் எழுந்தன. ரிசர்வ் வங்கியின் உரிமைகளைக் கட்டுப்படுத்தும் விதமாக வங்கிச் சட்டப் பிரிவு 7ஐ மத்திய அரசு செயலாக்கம் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த மோதல் போக்கு தொடர்ந்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்யவிருப்பதாக சென்ற மாதத் தொடக்கத்திலேயே செய்திகள் வெளியாகியிருந்த நிலையில், தற்போது உர்ஜித் படேல் அந்த முடிவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.