தந்தையைக் கைது செய்யுங்கள்: சிறுமி புகார்!

ஆம்பூரில் கழிவறை கட்டித் தராமல்
ஏமாற்றும் எனது தந்தையைக் கைது செய்யுங்கள் என 7 வயதான சிறுமி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் ஆம்பூர் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இஷானுல்லா. கூலித் தொழிலாளியான இவருக்கு ஹனீப்பாஜாரா (7) என்ற மகள் உண்டு. இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவர்கள் வீட்டில் கழிவறை கிடையாது. இந்நிலையில் ஹனீப்பாஜாரா ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்குச் சென்று புகார் தெரிவித்துள்ளார். “நான் படிப்பில் முதலிடம் வந்தால் கழிவறை கட்டித் தருவதாக எனது தந்தை வாக்குறுதி அளித்திருந்தார். எல்கேஜி முதல் இரண்டாம் வகுப்பு வரை நான் முதல் ரேங்க் தான் எடுத்து வருகிறேன். ஆனால், இதுவரை என் தந்தை கழிவறை கட்டிக் கொடுக்கவில்லை. திறந்தவெளிக் கழிவறையைப் பயன்படுத்துவது அவமானமாக இருக்கிறது. அதனால், என்னை ஏமாற்றி வரும் எனது தந்தையைக் கைது செய்யுங்கள். கழிவறை கட்டித் தருகிறேன் என்று எழுத்துப்பூர்வமாக அவர் எழுதிக் கொடுக்க வேண்டும்”என்று அந்த புகார் மனுவில் அவர் கூறியிருந்தார்.
இதைப் பார்த்த சார்புஆய்வாளர் வளர்மதி அதிர்ச்சியடைந்தார். ஆனாலும், கழிவறை கட்டுவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டார். இதையடுத்து, ஆம்பூர் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் சுப்பிரமணியனைத் தொடர்பு கொண்டு பேசினார். சிறுமியின் பெற்றோர் மனு அளித்தால், அரசுத் திட்டத்தின் மூலம் கழிவறை கட்டித் தருவதாகக் கூறினார் சுப்பிரமணியன்.
அதன்படி, சிறுமி ஹனீப்பாஜாராவின் பெற்றோர் நகராட்சி அலுவலகத்திற்குச் சென்று மனு அளித்தனர். இதைத் தொடர்ந்து, நகராட்சி துப்புரவு அலுவலர் பாஸ்கர் நேரடியாக சிறுமியின் வீட்டிற்குச் சென்று, கழிவறை கட்டித் தருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கூறினார்.
இது குறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்சியர் ராமன் நெகிழ்ச்சியடைந்தார். ஆம்பூர் நகராட்சி ஆணையரைத் தொடர்பு கொண்டு சிறுமியின் வீட்டுக்கு தனிநபர் கழிவறை கட்டித் தர உத்தரவிட்டார்.
Powered by Blogger.