தமிழக எல்லையில் நிறுத்தப்பட்ட பேருந்துகள்

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பாஜக சார்பில் முழு அடைப்புப்
போராட்டம் நடப்பதால், அங்கு செல்லும் தமிழகப் பேருந்துகள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன.
சபரிமலையில் அனைத்து வயதுப் பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பையடுத்து, கேரளாவில் பல போராட்டங்களும், அதன் தொடர்ச்சியாகச் சில வன்முறைச் சம்பவங்களும் நடைபெற்றன. வன்முறையைத் தடுப்பதற்காகச் சபரிமலை சன்னிதானம், நிலக்கல் உள்ளிட்ட பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வலியுறுத்தி, நேற்று முன்தினம் முதல்வர் பினராயி விஜயன் வீட்டை முற்றுகையிட்டனர் பாஜகவினர். அப்போது, தடியடி நடத்தியும் கண்ணீர் புகைக்குண்டு வீசியும் போலீசார் அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
போலீசாரின் அடக்குமுறையைக் கண்டித்து, இன்று (டிசம்பர் 11) திருவனந்தபுரத்தில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்திருந்தது. அதன்படி, இன்று மாவட்டம் முழுவதும் கடைகள் அடைக்கப்பட்டன; அங்குள்ள சாலைகள் வெறிச்சோடிக் காணப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. இதனால், கன்னியாகுமரி மாவட்டம் வழியாக கேரளா செல்லும் தமிழக அரசுப் பேருந்துகள், ஆம்னி பேருந்துகள், சரக்கு வாகனங்கள் என அனைத்தும் களியக்காவிளையுடன் நிறுத்தப்பட்டன. பாதுகாப்பு கருதி தமிழக அரசுப் பேருந்துகள் கேரள மாநிலத்துக்குள் செல்ல வேண்டாம் என தமிழகப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.