துணை ஆளுநர் ராஜினாமா: ஆர்பிஐ மறுப்பு

ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் ராஜினாமாவைத் தொடர்ந்து துணை
ஆளுநர் வீரல் ஆச்சார்யாவும் ராஜினாமா செய்யவுள்ளதாக வெளியானத் தகவல்களை ஆர்பிஐ மறுத்துள்ளது.
2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் ரிசர்வ் வங்கி ஆளுநராக இருக்க உர்ஜித் படேலுக்கு பதவிக்காலம் இருக்கும் நிலையில், தனது சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்வதாக நேற்று (டிசம்பர் 10) உர்ஜித் படேல் அறிவித்தார். சொந்த காரணங்களுக்கான ஓய்வு பெறுவதாக உர்ஜித் படேல் அறிவித்திருந்தாலும், அண்மைக்காலமாக மத்திய அரசுக்கும், ரிசர்வ் வங்கிக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வந்தது என்பதையும் மறுக்க இயலாது.
ரிசர்வ் வங்கியின் வைப்பு நிதியிலிருந்து ரூ.3.50 லட்சம் கோடியை மத்திய அரசு கேட்பதாகவும், ரிசர்வ் வங்கியின் தன்னாட்சி உரிமைகளில் அரசு தலையிடுவதாகவும் மத்திய அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. அக்டோபர் 26ஆம் தேதி ரிசர்வ் வங்கியின் துணை ஆளுநர் வீரல் ஆச்சார்யா நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், மத்திய அரசு ரிசர்வ் வங்கியின் உரிமைகளில் தலையிட்டால் நிதிச் சந்தைகளின் கோபத்துக்கு அரசு ஆளாகும் என்று வெளிப்படையாகவே எச்சரித்தார்.
இது ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையில் கருத்து முரண்பாடுகள் நிலவுவதை உறுதி செய்தது. இதனையடுத்து தற்போது உர்ஜித் படேல் தனது பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில், அரசுக்கு எதிராகத் துணிச்சலாக தனது கருத்தை வெளிப்படுத்திய வீரல் ஆச்சார்யாவும் தனது பதவியை ராஜினாமா செய்வார் என்று தகவல்கள் பரவின. இந்நிலையில் அந்தத் தகவல் முற்றிலும் வதந்தி என்று ரிசர்வ் வங்கியின் அதிகாரி ஒருவர் டி.என்.என்.ஊடகத்திடம் தெரிவித்துள்ளார்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.