மாநிலத் தேர்தல்களில் பாஜக தோல்வி

ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், தெலங்கானா, சத்தீஸ்கர்
ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த மாநிலங்களில் இன்று (டிசம்பர் 11) காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அனைத்து மாநிலங்களிலும் பாஜகவுக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளதை வாக்கு எண்ணிக்கையின் முன்னிலை விவரங்கள் காட்டுகின்றன.
தற்போதைய நிலவரப்படி சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பாஜக ஆட்சியை இழக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் இழுபறி நீடித்தாலும் ஒரு சில இடங்கள் வித்தியாசத்தில் காங்கிரஸ் அங்கும் ஆட்சியைப் பிடிக்கும் என்று தெரிகிறது. தெலங்கானாவில் ஆளுங்கட்சியான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி (டி.ஆர்.எஸ்.), மிசோரம் மாநிலத்தில் மிசோரம் தேசிய முன்னணி ஆகியவை முன்னிலையில் உள்ளன.
பாஜகவைக் கைவிடும் சத்தீஸ்கர்
மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த 90 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கரில், இரண்டு கட்டங்களாக நவம்பர் 12 மற்றும் 20 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதில், 70 சதவிகித வாக்குகள் பதிவாகின. இங்குக் கடந்த 15 ஆண்டுகளாக பாஜக முதல்வர் ராமன் சிங் ஆட்சியில் இருந்துவருகிறார். சத்தீஸ்கரில் ஆட்சியைப் பிடிக்க 46 இடங்களில் வெற்றி பெற வேண்டும். இங்கு தற்போது காங்கிரஸ் முன்னிலை பெற்றுவருகிறது.
ம.பி.யில் இழுபறி
230 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட மத்தியப் பிரதேசத்திலும், 40 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட மிசோரமிலும் நவம்பர் 28ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. மத்தியப் பிரதேசத்தில் 65.5 சதவீதமும், மிசோரமில் 73 சதவிகித வாக்குகளும் பதிவாகின. ஆட்சியைப் பிடிக்க ம.பி.யில் 116 இடங்களிலும் மிசோரமில் 21 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும். மத்தியப் பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே ஒரு சில இடங்கள் மட்டுமே வித்தியாசம் இருந்தாலும் அங்கும் காங்கிரஸே முன்னிலையில் உள்ளது.
பாலைவனத் தாமரை வாடியது
200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தானிலும், 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவிலும் டிசம்பர் 7ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. தெலங்கானாவில் 67 சதவிகித வாக்குகளும் ராஜஸ்தானில் 72.83 சதவிகித வாக்குகளும் பதிவாகின. தெலங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க 60 இடங்களிலும், ராஜஸ்தானில் 100 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும்.
ராஜஸ்தானில் பாஜகவுக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தெலங்கானாவில் டி.ஆர்.எஸ் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் – தெலுங்கு தேசம் கூட்டணி இரண்டாவது இடத்தில் உள்ளது.
காங்கிரஸ், டி.ஆர்.எஸ். கொண்டாட்டம்
பாஜக ஆளும் மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் முன்னிலையில் இருப்பதைத் தொடர்ந்து, அக்கட்சித் தொண்டர்கள் உற்சாகத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். தெலங்கானாவில் இரண்டாவது முறையாக டிஆர்எஸ் கட்சி ஆட்சி அமைக்கும் சூழல் நிலவுவதால் அக்கட்சியினரும் வெற்றியைக் கொண்டாடிவருகின்றனர்.
மூன்று மாநிலங்களிலும் காங்கிரஸ் ஆட்சியமைக்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் சச்சின் பைலட் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தோல்வி எங்களைத் துவளச் செய்யாது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். மோடி அலை ஓயாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.