விக்ரம் படத்தில் ஷாருக் கான் நிறுவனம்!

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்கும் கிடைத்த வரவேற்பு
இந்தியத் திரைப்பட தயாரிப்பாளர்களைப் பிரம்மாண்ட பட்ஜெட்டில் படமெடுக்கும் ஆர்வத்தைத் தூண்டின. வரலாற்றுச் சம்பவங்கள், புராணக் கதைகளை அடிப்படையாகக் கொண்டு படங்கள் உருவாக்கும் எண்ணத்தை இயக்குநர்கள் மத்தியிலும் விதைத்தன. பத்மாவத் போன்ற படங்கள் வசூல் சாதனை படைத்ததால் தொடர்ந்து அதற்கான முயற்சிகள் இந்தியத் திரையுலகம் முழுக்க முன்னெடுக்கப்படுகின்றன. குறைவான பட்ஜெட்டில் தரமான படங்களை உருவாக்கும் மலையாளத் திரையுலகும் இந்தப் போட்டியில் களமிறங்கியுள்ளது.
மலையாளத்தில் மகாபாரத்தில் இடம்பெற்றுள்ள கர்ணன் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு உருவாகும் மகாவீர் கர்ணா படத்தில் விக்ரம் கர்ணனாக நடிக்கிறார். ஆர்.எஸ்.விமல் இயக்கும் இந்தப் படம் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகிறது. இப்படத்தின் ஆரம்பகட்டப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. சமீபத்தில் கர்ணனின் தேரில் இடம்பெறுவதற்காக கேரளாவில் உள்ள பத்மநாபர் கோயிலில் இருந்து புகழ்பெற்ற மணியைப் படக்குழு பெற்றது. பி.ஜெயமோகன் கதை எழுதும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்க உள்ளது.
புராண சம்பவங்கள், இடங்கள் படத்தில் முக்கிய பங்கு வகிப்பதால் பெரும்பாலான காட்சிகள் கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தில் தயாராக உள்ளது. கிராபிக்ஸ் காட்சிகளை உருவாக்கப் படக்குழு ஷாருக் கானின் ரெட் சில்லீஸ் நிறுவனத்தை ஒப்பந்தம் செய்துள்ளது. ஷமீர் முகமது படத்தொகுப்பாளராக இணைந்துள்ளார்.
தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் படம் தயாராவதால் அந்தந்த திரையுலகைச் சார்ந்த நடிகர்களைப் படத்தில் இணைக்கும் பணி நடைபெறுகிறது. அது தவிர 32 மொழிகளில் இப்படம் டப்பிங் செய்யப்படவுள்ளது. ஹைதராபாத், ஜெய்ப்பூர் மற்றும் கனடாவில் இப்படத்தின் முக்கியக் காட்சிகள் படமாக்கத் திட்டமிட்டுள்ளனர். நியூயார்க்கில் உள்ள யுனைடெட் ஃபிலிம் கிங்டம் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.

No comments

Powered by Blogger.