தமிழ் மக்களின் பிரச்சினைக்கு சட்ட ரீதியாக தீர்வு

புதிய அரசியல் யாப்பின் ஊடாக தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என, ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.
பிரிக்கப்படாத இலங்கைக்குள் ஒற்றையாட்சியின் கீழ், தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் ஏற்றுக் கொள்ளும் தீர்வினை வழங்கவுள்ளதாகவும் அவர் கூறினார்.
நாடாளுமன்றத்தில் ரணிலுக்கு ஆதரவான நம்பிக்கை வாக்கெடுப்பு நிறைவேற்றப்பட்டதன் பின்னர்  உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், ”எமது அரசாங்கத்தில் பல்வேறு குறைப்பாடுகள் காணப்பட்டிருக்கலாம். பிரதான கட்சிகள் இணைந்து பணியாற்றிய போது ஏற்பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாக இக்குறைப்பாடுகள் தோற்றம் பெற்றதுடன், அதனால், மக்களுக்கான சேவைகளை நிறைவேற்றுவதில் சில தாமதங்களும் ஏற்பட்டிருக்கலாம்.
ஆனால், கல்வி, சுகாதாரம், வீடமைப்பு போன்ற சமூக பொறுப்புகளை நிறைவேற்றுவதில் அதிக தொகையை செலவிட்ட அரசாங்கம் என்ற வகையில் நாம் பெருமை அடைகின்றோம். சீரழிந்துள்ள பொருளாதாரத்தை சீரமைக்க முடியும். நாம் சொன்னதை செய்வோம். படிப்படியாக நிவாரணம் வழங்கி பாரிய அபிவிருத்தியை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம்.
கூட்டமைப்பின் உறுப்பினர் மாவை சேனாதிராஜா உரையாற்றியதை அவதானித்தேன்.  வடக்கு மக்களின் பிரச்சினைகள் குறித்து, நாம் நன்கு அறிவோம். எமது அபிவிருத்தி செயற்பாடுகளில் அவர்களது பிரச்சினைகளுக்கும் தீர்வினைப் பெற்றுக் கொடுப்போம். அதேபோல் சட்டரீதியான பிரச்சினைகளையும் தீரக்க நடவடிக்கை எடுப்போம்.
புதிய அரசியலமைப்பின் ஊடாக ஒற்றையாட்சியில் பிரிக்கப்படாத நாட்டிற்குள், சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் ஏற்றுக் கொள்ளும் தீர்வினை வழங்க நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். அதில் மாகாண சபையைப் பலப்படுத்துதல், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கவும் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம்.
இந்நாட்டின் ஜனநாயகத்தையும், இறையான்மையினையும் பாதுகாக்க நாம் இணைந்துள்ளோம். நாம் அனைவரும் இன்று சிங்களவர்களாகவோ, தமிழர்களாகவோ, முஸ்லிம்களாகவோ செயற்படவில்லை. இலங்கையர்கள் என்ற ரீதியில் செயற்பட்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.