தாமதத்திற்குத் தமிழக அரசே காரணம்!

கஜா புயல் சேத விவரங்கள் குறித்து
மத்திய குழு அறிக்கை தாக்கல் செய்யத் தாமதமாவதற்கு தமிழக அரசே காரணம் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கஜா புயலினால் டெல்டா மாவட்டங்கள் பெரும் சேதங்களுக்கு ஆளாயின. அதனால், புயல் பாதிப்புகளுக்கான நிவாரணத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும், தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று(டிசம்பர்12) நீதிபதிகள் சசிதரண், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நடைபெற்றது. அப்போது, தஞ்சை, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் வீடுகள் சேதம், இழப்பு குறித்து சரியான ஆவணங்களைத் தாக்கல் செய்யாதவர்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை என அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைப் பார்த்த நீதிபதிகள், ஏதேனும் ஆவணம் இல்லையென்றாலும் நிவாரணம் கொடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர். கஜா புயல் பாதிப்புகளுக்கு மத்திய அரசு முழுமையாக உதவி வழங்காதது ஏன் என்றும் இறுதி அறிக்கை எப்போது தாக்கல் செய்யப்படும் என்றும் மத்திய அரசு வழக்கறிஞர்களிடம் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இறுதி அறிக்கையைத் தயாரிப்பதற்கு முன்னர், சில சந்தேகங்களை தமிழக அரசிடம் கேட்டுள்ளதாகவும், அதற்கு இன்னும் பதில் வரவில்லை என்றும் மத்திய அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். அதனால்தான் கால தாமதம் ஏற்பட்டது என தெரிவித்தார். மத்திய குழுவின் சந்தேகங்கள் தொடர்பாக இன்றே விளக்கங்கள் அனுப்பப்படும் என தமிழக அரசு வழக்கறிஞர் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, இறுதி அறிக்கையைத் தாக்கல் செய்ய எவ்வளவு நாட்கள் ஆகும் என்பதைக் கேட்டு நீதிமன்றத்தில் தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், 17ஆம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.