கன்னட ‘ஜானு’ யாரு தெரியுமா?

விஜய் சேதுபதி, த்ரிஷா நடிப்பில்
அக்டோபர் 4ஆம் தேதி வெளியான 96 திரைப்படம் ரசிகர்களிடையேயும் விமர்சகர்களிடையேயும் நல்ல வரவேற்பு பெற்றது. வெளியாகி ஒரு மாதத்தில் இந்தப் படத்தைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பியபோதும் திரையரங்கில் படத்திற்கான வரவேற்பு குறையவில்லை. இதனால் இந்தப் படத்தின் ரீமேக் உரிமைகளுக்கு நல்ல போட்டி இருந்தது.
தெலுங்கு உரிமையைத் தயாரிப்பாளர் தில் ராஜு கைப்பற்றியுள்ளார். முன்னணி இயக்குநர்களிடம் படத்தை உருவாக்குவதற்குப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. கன்னட இயக்குநர் பிரீதம் குபியும் நடிகர் கணேஷும் இணைந்து கன்னடத்தில் இந்தப் படத்தின் உருவாக்கத்தில் ஈடுபட்டுள்ளனர். ‘99’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிக்கும் கதாநாயகி யார் என்பது முடிவாகாமல் இருந்தது. தற்போது அந்த கதாபாத்திரத்தில் பாவனா ஒப்பந்தமாகியுள்ளார்.
96 திரைப்படத்தைப் பொறுத்தவரை த்ரிஷாவின் கதாபாத்திரம் மிகவும் வலுவாகப் படைக்கப்பட்டிருந்தது. திரையுலகில் 15 ஆண்டுகளுக்கும் மேல் கதாநாயகியாக நடித்து வரும் த்ரிஷா அந்த கதாபாத்திரத்தின் கனத்தைத் தாங்கியதோடு தனது தனித்துவமான நடிப்பால் அதை மெருகேற்றியிருந்தார். அனுபவம் வாய்ந்த நடிகையே அந்த கதாபாத்திரத்துக்குப் பொருத்தமானவராக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாவனா இணைந்துள்ளார். பாவனாவும் திரையுலகில் அறிமுகமாகி 15 ஆண்டுகளுக்கும் மேல் ஆகியுள்ளது. மேலும் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தும் அவர் அந்த கதாபாத்திரத்துக்கான சரியான தேர்வாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாவனாவைப் பொறுத்தவரை அவரது திரைவாழ்விலேயே ஒரே ஒரு ரீமேக் படத்தில் மட்டுமே நடித்து வருகிறார். நல்ல கதையம்சம் உள்ள படங்களின் ரீமேக்கில் நடிக்க வேண்டும் என்றிருந்த நிலையில் அவர் தற்போது 96 படத்தின் கதையால் ஈர்க்கப்பட்டு படத்தில் இணைந்துள்ளார்

No comments

Powered by Blogger.