அஸ்வின்: சுழல் பந்து எனும் லீலை

ஆர்.அபிலாஷ்

துணிச்சலான, வித்தியாசமான
சுழலராக கிரிக்கெட் சந்தையில் அறிமுகமானவர் ரவிச்சந்திரன் அஸ்வின். அவர் களமிறங்கிய காலம் ஐபிஎல் கிரிக்கெட்டை “காசு பணம் துட்டு மணி” எனத் தாளம் போட வைக்கத் தொடங்கிய காலம். அஸ்வின் சென்னை அணியின் தொடக்க பந்து வீச்சாளராக ஆடி, பலரையும் ஆச்சரியப்படுத்தினார். டி-20யில் ஒரு சுழலர் ஆதிக்கமாய் பந்து வீச முடியும் என்பதை முதலில் அறிவித்தவரே அவர்தான். மூன்று விஷயங்கள் அப்போது அஸ்வினிடம் தனித்துத் தெரிந்தன:
(1) அவர் தன் ஆப் ஸ்பின் பந்தை விட நேராகச் செல்லும் அல்லது வெளியே திரும்பும் பந்தையே சிறப்பாக வீசினார்.
(2) அபாரமான கட்டுப்பாடு கொண்டிருந்தார்.
(3) தொடர்ந்து பரிசோதனை செய்பவராக இருந்தார்.
இக்காரணங்களாலே அவர் டெஸ்ட் ஆட்டங்களில் சோபிக்க மாட்டார் என நம்பப்பட்டது. ஆனால் தோனி அவ்வாறு நம்பவில்லை. அவர் அஸ்வினை டெஸ்டில் களமிறக்கினார்.
டெஸ்ட் போட்டிகளில் சாதனை
டெஸ்ட் போட்டிகளில் அஸ்வின் மேலும் அதிகமாய் ஆதிக்கம் செலுத்தினார். அஸ்வின், அவரது உயரம் காரணமாய் பந்தைத் துள்ள வைப்பவர். நேராக வீசுபவர். சுலபத்தில் கணிக்க முடியாதவர். டெஸ்ட் ஆட்டத்துக்கு அவசியமான கூர்மையும் கட்டுப்பாடும் அவரிடம் உண்டு. ஆக அவரது தொடக்கமே அட்டகாசமாக இருந்தது. 2011இல் தன் முதல் டெஸ்ட் போட்டியிலே 9 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முதல் 16 போட்டிகளில் 9 முறை ஐந்து விக்கெட்டுகளை ஒரு இன்னிங்ஸில் எடுத்து குறைந்த ஆட்டங்களில் நூறு விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர் எனும் எரப்பள்ளி பிரசன்னாவின் சாதனையை முறியடித்தார். 2013இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நான்கு டெஸ்டுகளில் 29 விக்கெட்டுகள் வீழ்த்தி நான்கு டெஸ்ட் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இந்தியர் எனும் சாதனையைப் படைத்தார். 2017இல் உலகிலேயே மிகக் குறைந்த ஆட்டங்களிலேயே 250 விக்கெட்டுகளை வீழ்த்தியவர் எனும் சாதனையைப் படைத்தார். அவரது டெஸ்ட் விக்கெட் எண்ணிக்கை 65 போட்டிகளில் 342. அவரது பந்து வீச்சு சராசரி (25.44) அபாரமானது. டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 26 முறை ஐந்து விக்கெட்டுகளும் 7 முறை பத்து விக்கெட்டுகளும் எடுத்திருக்கிறார்.
இந்த அபாரமான அசுர வளர்ச்சியின் ஊடே அஸ்வின் வேறு எந்த வீச்சாளரையும்விட மிக அதிகமாக உருமாறியிருக்கிறார். அவர் அளவுக்கு (கேரம் பந்து, சுழல் பந்து என) புதுப்புது விஷயங்களை முயன்றவர், தன் ஆக்‌ஷனைத் தொடர்ந்து மாற்றி வந்தவர், இதையெல்லாம் செய்து டெஸ்டில் வென்றவர் யாருமில்லை. ஆர்ம் பந்து, (கிட்டத்தட்ட) தூஸ்ரா, ப்ளிப்பர் ஆகியவற்றைக் குறைத்துக்கொண்டு உள்நோக்கிச் சுழன்று திரும்பும் பந்தை அதிகமாய் வீசினார். களத்தப்படுப்பு வியூகங்களை, பந்தின் வேகத்தை, எதிர்பாராமையைக் கொண்டு தன் ஆட்டத்தை மெருகேற்றியபடியே சென்றார்.
வியூக எந்திரம்
இப்படித்தான் அவர் இந்திய மண்ணில் ஆதிக்கம் செலுத்திய சுழலர்களில் (தர மதிப்பீட்டில்) கும்பிளேவை விஞ்சினார். (ஆதிக்கத்தில்) ஹர்பஜனை மறக்கடித்தார். இருவருமே எப்படிப் பந்து வீசுவார்கள் எனக் கணித்திட முடியும். ஆனால், அஸ்வினோ தொடர்ந்து ஏதாவது ஆச்சரியங்களை வைத்திருப்பார். இதுவே அவரது அசுர வளர்ச்சிக்குப் பிரதான காரணம். பல நேரங்களில் முன்னிலையில் நின்று களத்தடுப்பு, பந்து வீச்சு வியூகங்களை முயன்று பார்த்து பேட்ஸ்மேனைக் குழப்பித் திணறடித்து பின்னடைய வைப்பார் அஸ்வின். அவர் மனம் ஓயாது ஓடும் வியூக எந்திரம்.
ஆனால், அஸ்வினுக்கும் ஒரு சோதனை வந்தது.
அவரது உடல்தகுதி அவரைத் தொடர்ந்து கைவிட்டது. புஷ்டியான உடல் வாகு; காயங்கள் காரணமாய் பயிற்சி செய்து ஒல்லியாக, கட்டுறுதியாக மாற இயலவில்லை. இது அவர் பந்தை வெளியிடும்போது இடுப்புக்கு மேலாகத் திரும்பி (pivot) வீசத் தடையானது. இந்த பிவட்டிங் சுழல் பந்துக்கு ஆற்றலைக் கொடுப்பது. இதில்லாவிடில் சுழல் ஜீவனற்றுப் போகும். ஆக, அஸ்வின் இப்போது ஜீவனுக்கு ஆடுதளத்தை நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டது. எளிதில் சுழலாத ஆடுதளங்களில் அவர் பின்வாங்க நேர்ந்தது. சுலபத்தில் களைத்துப் போய் எரிச்சலடைந்தார். அவரது களத்தடுப்பு மிக மிக மோசமானது; அவரால் ஓடவோ, குனிந்து பந்தை அள்ளி எடுக்கவோ முடியவில்லை. ஒருநாள் போட்டிகளில் அவர் அணிக்கு பாரமானார்.
உடல் தகுதி சரிய, வெளிநாடுகளில் ஆடுதளங்கள் தடையாக, பந்து வீச்சில் காற்றில் மாயம் செய்து பழக்கமில்லாத அஸ்வினால் விக்கெட்டுகளை வீழ்த்தவோ, ரன்களைத் தடுக்கவோ முடியவில்லை. விளைவாக 2014இல் ஆஸ்திரேலியாவில் இந்தியா ஆடியபோது அஸ்வின் இடத்தில் கால் சுழலர் கரண் ஷர்மா ஆடவைக்கப்பட்டார், தென்னாப்பிரிக்காவில் ஜொஹனெஸ்பெர்க் டெஸ்ட் போட்டியில் அஸ்வினின் வீச்சு கடும் விமர்சனத்துக்குள்ளானது. அவரால் இந்தியாவின் வெற்றி வாய்ப்பு பறிபோனது எனக் கண்டனங்கள் எழுந்தன. அவர் அணியிலிருந்து நீக்கப்பட்டார். அடி மேல் அடியாய் ஒருநாள், டி-20 இடங்களும் காலியாகின.
மீண்டு வந்த அஸ்வின்
இந்தப் பின்னடைவுகளை அஸ்வின் நேர்மறையாக எதிர்கொண்டார். தொடர்ந்து பயிற்சி செய்து பல மடங்கு மேம்பட்ட டெஸ்ட் சுழலராகப் பரிணமித்தார். அவரது பந்து வீச்சில் லூப் மற்றும் டிரிஃப்ட் (loop and drift) முக்கிய அம்சமானது.
லூப்பை இப்படி விளக்கலாம்: பந்து பேட்ஸ்மேனை நோக்கி உள்ளே சுழன்று வருகிறது. ஆனால், காற்றில் அதன் சுழற்சி காட்சி மயக்கத்தை ஏற்படுத்தும். நேராக வருகிறது எனத் தோன்ற வைக்கும் பந்து உள்ளே போகும். உள்ளே வருவதாய்த் தோற்றமளிக்கும் பந்து நேராய் செல்லும். டிரிஃப்ட் என்பது காற்றில் ஒரு பந்து தன் திசையை மாற்றுவது. இந்த இரண்டு ஆயுதங்களையும் கொண்ட ஒரு சுழலர் ஆடுதளத்தை நம்பியிருக்க வேண்டியதில்லை. அவரால் காற்றிலேயே பேட்ஸ்மேனை முறியடிக்க முடியும்.
இது சுலபமல்ல. சுழற்றும்போது அபாரமான கட்டுப்பாடு தேவை. விரல்களுக்குக் கடும் அழுத்தத்தைக் கொடுக்க வேண்டும்; விரல்கள் சொன்ன பேச்சைக் கேட்க வேண்டும்; கொஞ்சம் சொதப்பினால் ஃபுல் டாஸாகிவிடும். இந்த இரண்டு வித்தையும் கைவரப்பெற்ற சுழலரால் பந்தின் போக்கைத் தன் சொல்லுக்குக் கட்டுப்பட வைக்க முடியும்.
சமீபத்தில் இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரின்போது ஆடிய அஸ்வின் பழைய அஸ்வின் அல்லர். அவர் உலகின் எந்த மூலையிலும் ஆதிக்கம் செலுத்தும் வல்லமை பெற்றிருந்தார். ஆனால், அவரது உடல்தகுதி அவரை முதல் டெஸ்டிலிருந்தே கைவிடத் தொடங்கியது. ஆகையால், அவரால் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் சோபிக்க முடியுமா என விவாதங்கள் நடந்தன. பல நிபுணர்களும் குல்தீப் யாதவே ஆஸ்திரேலிய மண்ணுக்குத் தோதானவர் என்றனர். ஆஸ்திரேலியாவில் அஸ்வினின் பந்து வீச்சு சராசரி 50க்கு மேல் எனச் சுட்டிக்காட்டினர். அடிலெய்டில் நடந்த முதல் டெஸ்டில் ஆடுதளம் சற்றே மெத்தனமானது; கொஞ்சம் சுழல்வது. இது பேட்ஸ்மேனைக் கட்டுக்குள் வைக்க அவருக்குக் கைகொடுத்தது என்றாலும் பிளைட், லூப், டிரிஃப்டைக் கொண்டுதான் அஸ்வின் பெரும்பாலான விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதைக் கவனிப்பதே நல்ல கலை அனுபவமாய் இருந்தது.
கவாஜாவுக்கு அஸ்வின் விரித்த வலை
அடிலெய்டில் நான்காவது நாளன்று ஆஸ்திரேலியா 323 எனும் இலக்கை நோக்கி ஆடிவந்தபோது இடது கையாளரான உஸ்மான் கவாஜா வருகிறார். அவரே தற்போது ஆஸ்திரேலியாவின் சிறந்த பேட்ஸ்மேன். அஸ்வின் வழக்கம்போல் இடது கையாளரின் கால் பக்கமாய் பந்து விழுவது போல மயக்கம் தோன்றும்படியாய் லூப் செய்து வீசுகிறார். ஆனால் பந்து விழுந்த பின் வெளிநோக்கித் திரும்புகிறது. கவாஜா இதைச் சமாளிப்பதற்காக இறங்கி வந்து அடிக்க முயல்கிறார். ஆனால் லூப்பும் டிரிஃப்டும் அவரை நேராக அடிக்கச் செய்கின்றன. பந்து கடைசி நேரத்தில் வெளிநோக்கித் திரும்பிட, கிட்டத்தட்ட அவுட் ஆகிறார். ஆனால் தப்பித்துவிட்டார்.
இதற்கு அடுத்த பந்தில் அஸ்வின் என்ன செய்ய வேண்டும்? முந்தைய பந்தைப் போன்றே வீச வேண்டும் என நாம் சொல்வோம் அல்லவா! ஆனால், அஸ்வினோ வேறு விதமாய் சிந்தித்தார்.
அஸ்வின் அடுத்த பந்தைச் சற்று வைடாக, குறை நீளத்தில் வீசினார். கவாஜா அதை வெட்டி ஆடினார். அடுத்ததற்கு அடுத்த ஓவர். அஸ்வின் மீண்டும் கவாஜாவுக்கு வீச வருகிறார். சில பந்துகளை வெளியே திருப்பிவிட்டு ஒரு பந்தை நேராக பிளைட் செய்து வீசுகிறார். அழகான லூப்புடன் இப்பந்து கவாஜாவை அடிக்கக் கோருகிறது. கவாஜா தன்னை அறியாது இறங்கி வருகிறார்; வந்த பின் அதைத் தடுத்தாட முடியாது என எண்ணிக் கூடுதலாய் நெருங்கிச் சென்று தூக்கி அடிக்கிறார். இப்போது பந்து டிரிஃப்ட் ஆகி வெளியே போகிறது. லீடிங் எட்ஜ் எக்ஸ்டிரா கவருக்குச் செல்ல ரோஹித் ஷர்மா அங்கு லாகவமாய் அதை ஏற்கிறார்.
இதே பந்தை அஸ்வின் கவாஜாவுக்கு முந்தின ஓவரில் அடுத்தடுத்து வீசியிருந்தால் அவர் கவருக்கு மேலாக அடித்திருப்பார். விக்கெட் விழுந்திருக்காது. ஏனென்றால் பேட்ஸ்மேன் தெளிவற்று, சுயசிந்தனையற்று பந்தின் போக்கால் வசியப்பட்டு அடித்தாடும்போதே வெளியேற வாய்ப்பு அதிகம். மட்டையாளரின் ஷாட் செல்லும் வழி மனமும் சென்றால், அறிவும் பிரக்ஞையும் சென்றால் அது நல்ல ஷாட்டாகும். ஆனால், உணர்வால் தவறாய் வழிநடத்தப்பட்டு ஆடும்போது மட்டையாளர் வீழ்கிறார். அஸ்வின் தொடர்ந்து இரண்டாம் முறையாக அப்பந்தை வீசியிருந்தால் கவாஜா அதை பிரக்ஞைபூர்வமாய் எதிர்கொண்டிருப்பார். ஆகையால்தான் அவரை ஏமாற்றும் விதமாக அஸ்வின் குறை நீளப் பந்தை வீசினார். ஆனால், அடுத்த ஓவரில் இந்த லூப்பான பந்து கவாஜாவை நோக்கி எதிர்பாராத வேளையில் வருகிறது. அஸ்வினின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு பந்து மாயம் செய்ய கவாஜா ஆடும் நிலைமை ஏற்படுகிறது. லீடிங் எட்ஜ் பிறக்கிறது. இதை விடச் சிறப்பாய் ஒரு பேட்ஸ்மேனின் மனத்தையும் உடலையும் ஒரு சுழலர் கட்டுப்படுத்த முடியுமா?
இன்று உலகின் தலை சிறந்த ஆப் சுழலர்கள் அஸ்வின், ஆஸ்திரேலியாவின் நேதன் லயன். இருவரில் சுழல் கலையின் நுணுக்கத்தைப் பொறுத்தமட்டில் யார் மேல் என்றால் அஸ்வின்தான். லயன் ஆடுதளத்தின் சாதகங்களை எந்திரத்தனமாய் பயன்படுத்துபவர்; தன் முனைப்பு, டாப் ஸ்பின் மற்றும் தொடர்ந்த கட்டுப்பாட்டால் விக்கெட்டுகள் எடுப்பவர். ஆனால், அஸ்வினோ பேட்ஸ்மேனின் மனத்தை வசியப்படுத்தி தனக்குத் தானே பாதகம் செய்யும்படியாய் ஆட வைப்பவர். பல விதங்களில் அவர் ஷேன் வார்னை நினைவுபடுத்துகிறார். லயன் பீமசேனன், அஸ்வினோ உள்ளங்கவர் கள்வன். ராதைகளைத் தன் குழலுக்கு வசியப்படுத்துபவர்.
ஒரு டெஸ்ட் ஆட்டத்துக்குள் அஸ்வினின் ஆட்டம் ஒரு தனியாட்டம். அது ஒரு லீலை

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.