ரஜினியிடம் இன்றைய ஹீரோக்கள் கற்றுக்கொள்ள வேண்டியது

உதய் பாடகலிங்கம்


ரஜினிகாந்த் பிறந்தநாள் (டிசம்பர் 12) கட்டுரை
நடிகர் ரஜினிகாந்திடம் கற்றுக்கொள்ள எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. அதில் எவற்றையெல்லாம் இன்றைய நாயகர்கள் கற்றுக்கொள்ளப் போகிறார்கள் என்பது அவர்களைப் பொறுத்தது.
இன்றைய நாயகர்கள் பலர் பிளாஸ்டிக் புகழ்ச்சிகளுக்குப் புளகாங்கிதம் அடைந்து, அடுத்தடுத்துக் கிடைக்கும் சில வெற்றிகளுக்குப் பிறகு ஜார்ஜ் கோட்டையைக் குறிவைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். இகழ்ச்சியும் ஏளனமும் அவமானமும் மட்டுமல்ல, கடுமையான விமர்சனமும்கூட அவர்களுக்குக் காயத்தையே ஏற்படுத்துகிறது. இதுவே இவர்களைக் குறித்த கிசுகிசுக்களும் வதந்திகளும் அதிகாரபூர்வமற்ற செய்திகளும் வெளியாகக் காரணமாகின்றன.
வந்தது பெண்கள் கூட்டம்
ஒருகாலத்தில் ஆண்கள் மட்டுமே ரசிக்கும் நடிகர் என்ற பெயர் ரஜினிக்கு உண்டு. பில்லா, முரட்டுக்காளை படங்கள் வெளியான பின்பும் இது தொடர்ந்ததாகக் கூறப்படுவதுண்டு. இந்த விமர்சனத்தைத் தலைகீழாக மாற்றி பெண்கள், குழந்தைகள் என்று குடும்பத்தினர் அனைவரையும், தனது படத்தின் மூலமாக ‘அய்’ என்று விரல் கடிக்க வைத்தவர் ரஜினிகாந்த். இவருக்கு நகைச்சுவை நடிப்பு வராது என்று விமர்சனம் வெளியான காலகட்டத்தில், தில்லுமுல்லு படத்தை இயக்கினார் கே.பாலசந்தர். ஆனாலும், தம்பிக்கு எந்த ஊரு படம்தான் ரஜினியின் கமர்ஷியல் டெம்ப்ளேட்டை முற்றிலுமாக மாற்றியது. பாடல், சண்டைக்காட்சிகள், காமெடி, காதல், சென்டிமென்ட் என்று எல்லாம் கலந்த கமர்ஷியல் படத்தை ரஜினி இதன்பின் தொடர்ந்து தந்தார். அதில் உச்சம் தொட்டவை அண்ணாமலை, பாட்ஷா, படையப்பா போன்ற படங்கள். இயக்குநர், நடிகர் பார்த்திபன் ஆச்சரியப்பட்டு சொன்ன தகவல் இது.
குறுகிய வட்டத்துக்குள் குதிரை
‘உத்தமபுத்திரன்’ படத்தில் வரும் சிவாஜி கேரக்டரின் ஸ்டலை இமிடேட் செய்தே காலத்தை ஓட்டிவிட்டார் என்பது ரஜினிகாந்த் மீது மெத்தேட் ஆக்டிங் லவ்வர்ஸ் முன்வைக்கும் குற்றச்சாட்டு. அது உண்மையா, இல்லையா என்ற விவாதத்துக்குள் செல்லத் தேவையில்லை. சிவாஜி கணேசனே தனது உத்தமபுத்திரன் பட பாத்திரத்தை ஓரிரண்டு முறைகளுக்கு மேல் மீள் உருவாக்கம் செய்திருக்க முடியாது என்பதே உண்மை.
ஒருமுறை சென்ற பாதை வழியே அடுத்த முறை செல்வது போரடிக்கும் என்றாகிப்போன காலத்தில், கமர்ஷியல் பார்முலா என்ற எல்லைக்குள் ஒவ்வொரு முறையும் ரசிகனின் உற்சாகம் குன்றாமல் திரைப்படங்கள் தந்தது ஒவ்வொரு நடிகரும் கற்றுக்கொள்ள வேண்டிய இன்னொரு கலை. ரஜினிகாந்த் நடித்ததில் சுமார் 130க்கும் மேற்பட்ட படங்கள் இந்த ரகம்தான் என்பது ஆச்சரியத்தை வரவழைக்கக்கூடியது.
சுருதி பேதம்?
அபூர்வ ராகங்கள் படத்தில் ரஜினி ஒரு கேட்டைத் திறந்தவாறே நுழைவார். ஒரு புதுமுகத்துக்கு இது அசத்தலான அறிமுகம்தான். ஆனால், அந்த காட்சியில் சுருதி பேதம் என்ற எழுத்துகள் தோன்றி மறையும். எதிர்மறையான இந்த வார்த்தைகள், ஒரு கலைஞனின் அடுத்த கட்ட கனவுகள் குறித்த எதிர்மறை அபிப்பிராயங்களையே உருவாக்கும். அதனைத் தகர்த்தெறிந்து இன்றுவரை பலருக்கும் தன்னம்பிக்கை அளித்துவருபவர் ரஜினிகாந்த்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனக்குப் பிடித்த நடிகர் என்று ரஜினிகாந்தைக் குறிப்பிடுவார். எந்திரன், 2.O பட விழாக்களில் மட்டுமல்லாமல் சில பேட்டிகளிலும் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். அவரைப் பொறுத்தவரை, ரஜினி என்பவர் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கான ஒரு முன்னுதாரணம். இதனைப் படிக்கையில், வெற்றி பெற்றவர்களைப் பற்றி இப்படி புகழ் பாடுவது ஒரு வழக்கமாகத் தொடர்கிறது என்ற சலிப்பு வரலாம். ஆனால், சற்றுக் கூர்ந்து பார்த்தால் இதிலுள்ள உண்மை விளங்கும்.
‘அவர்கள்’ படப்பிடிப்பின்போது, ‘இவனுக்கெல்லாம் நடிப்பே வராது; ஜெய்கணேஷைக் கூட்டிட்டு வாங்க’ என்று ரஜினிகாந்த் கண்ணெதிரிலேயே ஷூட்டிங்கை கேன்சல் செய்தார் இயக்குநர் கே.பாலசந்தர். இயக்குநர்கள் சங்க 40ஆவது ஆண்டு விழா நடைபெற்றபோது, பாலசந்தரே வெளிப்படுத்திய தகவல் அது. இதைச் சொன்னபோது, அவருடன் மேடையில் ரஜினிகாந்தும் இருந்தார்.
அதே பாலசந்தர்தான் அதற்கடுத்த சில ஆண்டுகளில் ரஜினிகாந்தை வைத்து நெற்றிக்கண் என்ற படத்தைத் தயாரித்தார். அண்ணாமலை, முத்து போன்ற படங்களின் தயாரிப்பாளர் ஆனபோது, ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ஆகி இமயமலை செல்லத் தொடங்கிவிட்டார்.
இயக்குநர்கள் சங்க 40ஆவது ஆண்டுவிழா மேடையில் பாலசந்தர் ரஜினிகாந்தைப் பேட்டி கண்டார். அப்போது, அவரது பேச்சைக் கேட்பதற்காக அவரை நோக்கி தனது நாற்காலியைத் திருப்பிப் போட்டுக்கொண்டு அமர்வார் ரஜினி. தனது உடல்மொழியிலேயே பாலசந்தர் பேச்சைக் கர்ம சிரத்தையோடு கேட்கும் தொனி வெளிப்படும். ஒரு பள்ளிக்கூட மாணவன் தனது வகுப்பு ஆசிரியர் முன்னால் இருப்பது போல இருபது நிமிடங்களுக்கும் மேலாக உட்கார்ந்திருந்தார். உன்னிடம் உனக்குப் பிடித்த விஷயம் எது என்று பாலசந்தர் கேட்டபோது, உண்மையைப் பேசுவது என்று தெரிவித்தார். இந்த குணமே அவரைச் சில சிக்கல்களில் தள்ளியது என்பதையும் மறுக்க முடியாது.
எதையும் தாங்கும் பக்குவம்
ஓரிரு மணி நேரங்கள் தூங்கிவிட்டு அடுத்தடுத்த படங்களின் படப்பிடிப்பில் கலந்துகொண்டது, விமானப் பயணங்களில் உடை மாற்றிக்கொள்வது என்று ரஜினிகாந்த் பிஸியாக இயங்கிய காலம் ஒன்று உண்டு. அதிலிருந்து முற்றிலுமாக விலகி, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மூன்று மாத காலம் மட்டும் அவர் படத்தில் நடித்ததும் உண்டு. திட்டமிட்டோ, திட்டமிடாமலோ இப்படியொரு காலகட்டம் எல்லாக் கலைஞர்களின் வாழ்க்கையிலும் வரும். அதனை எதிர்கொள்ளும் பக்குவம் வேண்டும்.
ரஜினியைப் பற்றிப் புகழ்பவர்கள் அத்தனை பேருமே அவரது எளிமையை, நட்பு பாராட்டும் குணத்தை, வெளிப்படைத் தன்மையைப் பாராட்டுவார்கள். ரஜினியின் உடல்மொழியில் இருக்கும் ஸ்டைலைப் போலவே, இதுபோன்ற சில நற்குணங்களும் அவரது சினிமா வாழ்வைத் தாங்கிப் பிடித்துள்ளது.
இளைஞர்களுடன் கைகோத்த ரஜினி
கருணாநிதி என்ற ஒற்றைப் பெயர் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் தமிழக அரசியல் களத்தின் செயல்பாடுகளைத் தீர்மானிப்பதாக இருந்தது. அதேபோல, சுமார் 40 ஆண்டுகளாகத் தமிழ் சினிமாவின் போக்கைத் திசை மாற்றுபவராக இருந்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். ஒரு ட்ரெண்ட் செட்டராக இருக்கிறார். கபாலி, காலா, 2.O அடுத்து பேட்ட என்று தொடர்ந்து அவர் தனது ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாகப் படங்கள் கொடுத்து வருகிறார். உலகின் எந்த மூலையில் இருக்கும் நடிகரும், தன்னை ரசிப்பவர்களுக்காகத் தொடர்ந்து ஈடுபாட்டுடன் பணியாற்றுவதில் பெரிய ஆச்சரியமில்லை. ஆனால், அதில் அவர் காட்டும் ஈடுபாடும் சிரத்தையும்தான் இன்றுவரை அவரது அடையாளத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.
கபாலி, காலா படங்களில் இயக்குநர் பா.இரஞ்சித்துடன் அவர் இணைந்தபோது, பெரிதாகச் சிலாகித்தனர் தமிழ் சினிமா ரசிகர்கள். அதுபோலவே பேட்ட படத்தில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத், நடிகர்கள் விஜய் சேதுபதி, பாபி சிம்ஹா, சிம்ரன், த்ரிஷா என்று அடுத்தடுத்த தலைமுறையைச் சேர்ந்த இளம் கலைஞர்களோடு கைகோத்திருக்கிறார்.
பேட்ட படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பலரும், தன்னை ரஜினியின் ரசிகர் என்று சொல்லிக்கொண்டனர். ஒரு புன்சிரிப்பைத் தவிர அவரது முகத்தில் வேறெந்தச் சலனமும் இல்லை. தலைமுறை இடைவெளி என்ற வார்த்தையை ஓரம்வைத்துவிட்டு, இளம் கலைஞர்களது தோளோடு தோள் சேர்ந்து நிற்கத் தனியாக ஒரு தைரியம் வேண்டும். அது ரஜினியிடம் நிரம்பவே இருக்கிறது. ஈகோ இல்லாமல் வளரவே முடியாது என்பது போன்ற தவறான கற்பிதங்களுடன் வாழும் இளைய தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டிய உண்மை இது.
புதிய மாற்றம்
அமிதாப்பச்சன் தனது வயதுக்கேற்ற வேடங்களைத் தேர்ந்தெடுத்ததுபோல, புது வகையான சினிமா அனுபவத்தைத் தரத் தயாராகி வருகிறார் ரஜினி. அவர் தொடங்கிவைக்கும் மாற்றம் இந்தியாவிலுள்ள மற்ற மொழி சினிமாக்களிலும் தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும். தமிழிலும் அடுத்த தலைமுறை நடிகர்கள் புதிய இயக்குநர்களுடன் இணைந்து செயல்படக்கூடிய சூழலை ஏற்படுத்தும்.
தன்னம்பிக்கை என்ற சொல்லின் நிகழ்கால உதாரணம் ரஜினிகாந்த். பாபா தோல்விக்குப் பிறகு கிடைத்த சந்திரமுகி வெற்றியை, கீழே விழுந்த குதிரை மீண்டும் எழுந்ததாக உவமை கூறியவர். அவரிடம் இருந்து கற்றுக்கொள்ள தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு மட்டுமல்ல, நமக்கும் ஏராளம் இருக்கின்றன. ஏனென்றால், நாம் அனைவருமே ஹீரோக்கள்தான் என்ற எண்ணத்தை விதைத்தது ரஜினியின் வருகைதான். அந்த வகையில் ரஜினியின் வாழ்வனுபவங்களைக் கேட்டுச் சிலிர்ப்பது என்பது ஒரு தலைமுறையின் சுயபுராணம்தான்!

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.