ரஜினி ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட்

ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு சன் பிக்சர்ஸ் நிறுவனம் பேட்ட படத்தின் டீசரை வெளியிட்டுள்ளது.
வருடத்திற்கு ஏழு, எட்டு படங்களில் நடித்து வந்த ரஜினிகாந்த் 90களுக்குப் பின் ஆண்டுக்கு ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு ஒன்று என்ற வகையில் படங்களின் எண்ணிக்கையைக் குறைக்கத் தொடங்கினார். சில நேரங்களில் இந்தக் கால அளவு மேலும் அதிகரித்ததும் நடந்துள்ளது. லிங்கா, கோச்சடையான் ஆகிய படங்கள் 2014ஆம் ஆண்டு வெளியாகியிருந்தாலும், கோச்சடையான் படம் முழுக்க அனிமேஷன் தொழில்நுட்பத்தில் உருவாகியிருந்தது. அந்தவகையில் இருபது ஆண்டுகளுக்குப் பின் ரஜினி நடிப்பில் காலா, 2.O ஆகிய இரு படங்கள் இந்த ஆண்டு வெளியாகியுள்ளன. 2.O திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் போதே பொங்கலுக்கு பேட்ட படமும் வெளியாவதால் அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
பேட்ட படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வில் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ், இசையமைப்பாளர் அனிருத் இருவரும் மாறிமாறி தங்களை ரஜினியின் ரசிகன் மட்டும் அல்ல ரஜினியின் வெறியன் என்று அடையாளப்படுத்திக் கொண்டனர். அந்த வகையில் முழுக்க ரஜினி ரசிகர்களால் ரஜினி ரசிகர்களுக்காக எடுக்கப்பட்ட படமாக பேட்ட படம் என எதிர்பார்க்கப்பட்டது. அதை தற்போது வெளியாகியுள்ள டீசர் உறுதிப்படுத்தியுள்ளது. முழுக்க ரஜினியின் மாஸ் காட்சிகளின் சில ஷாட்டுகளை ஒருங்கிணைத்து டீசரை வடிவமைத்துள்ளனர். ஏற்கெனவே
வெளியிடப்பட்ட போஸ்டர்களில் ரஜினியின் இரண்டு வித தோற்றங்கள் காட்டப்பட்டிருந்தன. அதைக் காட்சியிலும் டீசரில் கொண்டுவந்துள்ளனர்.
ரஜினியின் பஞ்ச் வசனம் உள்ளிட்ட எந்த வசனமும் டீசரில் இல்லை. டீசரின் முடிவில் ரஜினியின் டிரேட் மார்க் சிரிப்பும் மரண மாஸ் பாடலின் சில வரிகளும் இடம்பெற்றுள்ளன. ரஜினியின் பிறந்தநாளை முன்னிட்டு டீசரை வெளியிட்டுள்ளதால் டீசர் முழுக்க ரஜினி மட்டுமே உள்ளார். வேறு எந்த கதாபாத்திரமும் காட்டப்படவில்லை. விரைவில் படத்தின் ட்ரெய்லரை வெளியிடுவதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.