காங்கிரஸுக்கு மாயாவதி ஆதரவு

5 மாநில தேர்தல் முடிவுகளை (டிசம்பர் 12) அதிகாலை தேர்தல் ஆணையம்
வெளியிட்டது. மத்தியப் பிரதேச தேர்தல் முடிவில் இழுபறி ஏற்பட்டிருந்த நிலையில், அங்கு 114 இடங்களில் வெற்றி பெற்று தனிப் பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்துள்ளது. எனினும் காங்கிரஸுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து பகுஜன் சமாஜ் கட்சி கூட்டணியுடன் காங்கிரஸ் ஆட்சி அமைக்கவுள்ளது.
ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தெலங்கானா, மிசோரம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு சட்டமன்றத் தேர்தல் நடந்து முடிந்து தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் வென்று தனி பெரும் கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்துள்ளது. பாஜக 5 மாநிலங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது. தெலங்கானாவில் மாநில கட்சியான, ராஷ்ட்ரிய சமிதியும், மிசோரமில் மிசோ தேசிய முன்னணியும் வென்றுள்ளது.
மத்திய பிரதேசத்தை பொறுத்தவரை காங்கிரஸ் (114), பாஜக (109) இருகட்சிக்கும் இடையே சிறு இடைவெளி மட்டுமே உள்ளது. இந்நிலையில் இரு கட்சிகளும் இதர கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைக்கத் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
காங்கிரஸ் ஆட்சி அமைக்க 2 இடங்கள் தேவைப்படும் நிலையில், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர், மாயாவதி ஆதரவு தெரிவித்துள்ளார். இதுகுறித்து மாயாவதி, “பாஜக மீதான அதிருப்தியின் காரணமாகவே மக்கள் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்துள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 114 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் ஆட்சியமைக்க மேலும் 2 இடங்கள் தேவை. எனவே அக்கட்சிக்கு ஆதரவு அளிக்கிறோம். தேவைப்பட்டால் ராஜஸ்தானிலும் ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிக்க தயார்” என்று கூறியுள்ளார்.
தேர்தல் முடிவுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்தியப் பிரதேச தலைமைத் தேர்தல் அதிகாரி வி.எல்.காந்தா ராவ், பாஜக, காங்கிரஸ் இடையே பெரும்பான்மை பெறுவதற்குக் குறைந்த அளவே வித்தியாசம் இருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு 2 உறுப்பினர்கள் ஆதரவும், பாஜகவுக்கு 7 இடங்களும் பற்றாக்குறையாக இருக்கின்றன. இதற்கிடையே பகுஜன் சமாஜ், சமாஜ்வாதிக் கட்சி ஆகியவை காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு தர முன்வந்துள்ளன. ஆதலால் காங்கிரஸ் ஆட்சி அமைக்கக் கோரும் என்று தெரிகிறது என குறிப்பிட்டுள்ளார்.
மாநிலத்தின் காங்கிரஸ் தலைவர் கமல்நாத், எங்களிடம் பெரும்பான்மையான உறுப்பினர்கள் உள்ளனர். பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆளுநரிடம் இது குறித்து பேச நேரம் கேட்டுள்ளோம். அவரிடம் ஆட்சி அமைக்க அழைக்கக் கோருவோம். இன்று மாலை எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறவுள்ளது என்று தெரிவித்தார்.
மற்ற கட்சிகளும் காங்கிரஸுக்கு ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் அக்கட்சிக்கு 117 இடங்கள் இருப்பதாகத் தெரிகிறது. இந்நிலையில், மத்திய பிரதேசத்தில் ஆட்சியமைக்கும்படி காங்கிரஸ் கட்சிக்கு ஆளுநர் ஆனந்திப்பென் படேல் அழைப்பு விடுத்துள்ளார்.
இதற்கிடையே, பாஜக தலைவர் ராகேஷ் சிங், காங்கிரஸுக்குப் பெரும்பான்மை இல்லை, சுயேட்சை கட்சிகள் எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். நாளை ஆளுநரிடம் ஆட்சி அமைக்க அழைக்குமாறு கோரவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.