ஜனாதிபதிக்கு ஐ.தே.க. சவால்


பொதுமக்களின் கருத்து கோரும் போலி செயற்பாடுகளை தவிர்த்து ஜனாதிபதி தேர்தலை நடத்துங்கள் என, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பாக பொது வாக்கெடுப்பு நடத்துவது தொடர்பாக மக்கள் கருத்து கோர நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார். இந்நிலையில், இது தொடர்பாக அலரி மாளிகையில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”மக்கள் கருத்து கோரும் நடவடிக்கை என்பது பாரிய நிதி வீணடிப்பு மாத்திரமின்றி தவறான விடயமுமாகும். ஆனால், மக்களின் நிலைப்பாட்டை அறிந்துக் கொள்ளும் செயற்பாட்டை இன்னும் ஓரிரு வாரங்களில் சட்ட ரீதியாகவே நிறைவேற்றிக் கொள்ளலாம். அதாவது எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதிக்கு பின்னர் அரசியலமைப்பின் படி ஜனாதிபதி தேர்தலை நடத்தி மக்களின் நிலைப்பாட்டை அறிந்துக் கொள்ள முடியும். அது சட்டரீதியானது என்பதுடன், அதன் முடிவுகளும் சட்டத்திற்கு உட்பட்டு இருக்கும். ஜனாதிபதியின் திட்டங்கள், கொள்கைகளை மக்கள் ஏற்றுக் கொண்டால் அவர் தலைமையிலான அரசாங்கத்தை தொடர்ந்து முன்னெடுத்து செல்லலாம். இல்லையேல், புதிய தலைமைத்துவத்தின் கீழ் நாட்டின் செயற்பாடுகளை முன்னெடுத்து செல்லலாம். எனவே, மக்கள் கருத்து கோரல் செயற்பாட்டிற்காக 450 கோடி ரூபாயை செலவிட்டு வீணடிக்காது, அதனை கொண்டு ஜனாதிபதி தேர்தலை நடத்தினால் தற்போது நிலவும் நெருக்கடிகளுக்கும், பிரச்சினைகளுக்கும் தீர்வு காணலாம்” எனத் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.