நீதிமன்றத்தின் உத்தரவினையடுத்து விசாரணைகள் ஆரம்பம்


தெல்லிப்பளை மயானத்தில் மாட்டின் சடலத்தை புதைத்தமை தொடர்பில் மல்லாகம் நீதவானின் உத்தரவுக்கு அமைய தெல்லிப்பளை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு அருகிலுள்ள மயானத்தில் சடலம் ஒன்று புதைக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக மயானத்தின் காவலாளி கிராம சேவையாளருக்கு அறிவித்தார். அதனை அடுத்து கிராம சேவையாளர் அது தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸாருக்கு அறிவித்தார். பொலிஸார் சம்பவ இடத்திற்குச் சென்று சந்தேகத்திற்கிடமான இடத்தினை ஆராய்ந்தபோது, சடலம் ஒன்று புதைக்கபட்டமைக்கான அறிகுறிகள் காணப்பட்டன. அதனையடுத்து, அப்பகுதியினை அகழ்வதற்கு மல்லாகம் நீதவானிடம் அனுமதி கோரினர். அதற்கு அனுமதியளித்த பின்னர், மல்லாகம் நீதவான் முன்னிலையில் நேற்றைய தினம் (புதன்கிழமை) சந்தேகத்திற்கிடமான பகுதி அகழப்பட்டது. அதன்போது அங்கு மாடொன்றின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. அதனையடுத்து சடலமாக கண்டெடுக்கப்பட்ட மாட்டின் காதில் உள்ள இலக்க தகட்டில் உள்ள இலக்கத்தின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து உரிமையாளரை கண்டறியுமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.