இந்தியப் பயணிகளுக்கு மலேசியா சலுகை!

மலேசிய சுற்றுலாப் பயணங்களை ஊக்குவிக்கும் வகையில் இந்தியப்
பயணிகளுக்கு சிறப்பு விடுமுறை தொகுப்புகளை மலேசியா வழங்கியுள்ளது.
இதுகுறித்து மலேசிய சுற்றுலாவின் தொகுப்பு மேம்பாட்டுப் பிரிவு இயக்குநர் துயான் சையத் யாஹ்யான் சையத் ஒத்மான் டி.என்.என் ஊடகத்திடம் பேசுகையில், “இந்தியப் பயணிகளுக்கு மலேசியன் சுற்றுலாவும், மலிண்டோ ஏர் நிறுவனமும் இணைந்து மலேசியாவின் பிரபல ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளில் 5 தொகுப்புச் சலுகைகளை வழங்கவுள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி 1 முதல் ஜூலை வரை மலேசியா சுற்றுலா பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் இந்தத் தொகுப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார். மலேசியாவுக்குச் செல்லும் இந்தியப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் விதமாக இந்தச் சலுகைகளை மலேசியா வழங்குகிறது.
இந்தச் சிறப்பு பயணத் தொகுப்புக்கான முன்பதிவு டிசம்பர் 15 முதல் ஜனவரி 15 வரையிலான ஒரு மாதத்துக்கு நடைபெறுகிறது. மலேசியாவுக்குப் பயணம் மேற்கொள்ளும் அதிகப் பயணிகளைக் கொண்ட நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தில் உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில் இந்தியாவிலிருந்து 4,37,736 பயணிகள் மலேசியாவுக்குச் சென்றுள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 10.4 விழுக்காடு உயர்வாகும். இதில் சென்னையிலிருந்தும் அதிக அளவிலான பயணிகள் மலேசியா செல்கின்றனர்.
இதுகுறித்து மலிண்டோ ஏர்நிறுவனத்தின் பொது மேலாளர் ( விற்பனை) மனோஜ் மேத்தா கூறுகையில், “ஹைதராபாத் மற்றும் வாரணாசியிலிருந்து மலேசியாவுக்கு விமானச் சேவைகளை வழங்கத் திட்டமிட்டுள்ளோம். இந்தப் பகுதிகளிலிருந்து அதிகளவிலான பயணிகள் மலேசியா செல்கின்றனர். சென்னையிலிருந்து தினமும் இருமுறை மலேசியாவுக்கு விமானச் சேவை வழங்கி வருகிறோம். 80 விழுக்காடு அளவுக்கு இருக்கைகள் எப்போதும் நிரம்பியுள்ளன” என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.