பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்த மூவருக்கு விளக்கமறியல்

மதுபோதையில் பொலிஸாருக்கு அச்சுறுத்தல் விடுத்த மூவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) பொலிஸார் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.

இதன்போது குறித்த வழக்கு மீதான மனுவை விசாரணை செய்த நீதிபதி, சந்தேகநபர்களை 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி, கோட்டைக்கல்லாறு பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை வீதி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸார், முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது முச்சக்கர வண்டியை செலுத்தி வந்தவர் உட்பட அதில் பயணித்த நான்கு பேரும் மதுபோதையில் இருந்துள்ளனர்.

இதனால் அவர்களை கைதுசெய்ய பொலிஸார் முயன்றபோது முச்சக்கர வண்டியில் இருந்த மூவர் “வவுணதீவில் நடந்த சம்பவத்தினை நினைவில் கொள்ளுங்கள். எங்களை கைதுசெய்தால் அதே நிலைமை உங்களுக்கு ஏற்படும்” என பொலிஸாரை மிரட்டியுள்ளனர்.

அதனைத்தொடர்ந்து  முச்சக்கரவண்டி சாரதி உட்பட நான்கு பேரையும் கைது செய்த பொலிஸார், மதுபோதையில் வாகனம் செலுத்தியமை,பொலிஸாரை அச்சுறுத்தியமை தொடர்பில் வழக்குகள் பதிவு செய்து ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றத்தில் சந்தேகநபர்களை நேற்று முன்னிலைப்படுத்தினர்.

இதன்போது, முச்சக்கர வண்டியில் பயணித்த மூவரையும் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டதுடன் முச்சக்கர வண்டி சாரதியை ஒரு இலட்சம் ரூபாய் சரீரப்பிணையில் விடுவிப்பதற்கு  அனுமதி வழங்கியுள்ளது.
#Tamilarul.net #tamil  #Tamilnews #News #Tamil #Srilanka #Jaffna #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.