ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்கத் தயார்: தமிழக அரசு!
ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளியான ரவிச்சந்திரன்
முறைப்படி விண்ணப்பித்தால் அவருக்கு 10 நாள் பரோல் வழங்கத் தயார் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட எழுவரை விடுதலை செய்ய தமிழக அரசு ஆளுநர் பன்வாரி லால் புரோகித்துக்கு பரிந்துரை செய்தது. ஆனால், மேற்கண்ட பரிந்துரை இன்னமும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஆளுநர் கால தாமதம் ஏற்படுத்தாமல் விரைவில் எழுவரை விடுவிக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
இதற்கிடையில் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவருள் ஒருவரான ரவிச்சந்திரனின் தாயார் ராஜேஸ்வரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். ரவிச்சந்திரனுக்கு பரோல் வழங்கக் கோரிய அந்த மனுவில், தனக்கு 62 வயதாகிவிட்டதால் அடிக்கடி நோய்வாய்ப்படுவதாகவும், சொத்து, வேளாண் விவகாரங்களைத் தனியாக கையாள இயலாமல் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின் படி 7 பேரையும் விடுவிக்கத் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகவும், விடுதலை செய்ய உத்தரவு வரும் வரை தனது மகனுக்கு நீண்டகால பரோல் வழங்க வேண்டும் என்றும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு இன்று (டிசம்பர் 18) நீதிபதி சுப்பையா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, எழுவர் விடுதலைத் தொடர்பான உத்தரவு தற்போது ஆளுநர் முன் பரிசீலனையில் உள்ளது. எனவே நீண்ட கால பரோலில் அனுப்புவது தொடர்பாக தற்போது முடிவு செய்ய முடியாது. எனவே உரியக் காரணங்களுடன் முறையாக விண்ணப்பித்தால் பத்து நாள் பரோல் வழங்க அரசு தயாராக உள்ளது என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

.jpeg
)





கருத்துகள் இல்லை