பாடுநிலாவே பாகம் 5


கண்களில் துளிர்த்த கண்ணீரை மறைப்பதற்காக மறுபுறம் திரும்பிக்கொண்ட சாதனா, சில நிமிடங்கள் அப்படியே இருந்தது இப்போதும் அவனது நினைவுகளில் வந்துபோனது.

அன்று, பரிதாபமாய் அவளைப் பார்த்த அவனை கோபமாய் பார்த்தாள்.
“என்ன?” மெல்ல இழுத்த அவனிடம்
“இது எனக்குப்பிடிக்காது” என்றாள்.
“எது?” என்றவனிடம்
“இப்பிடி பரிதாபமா பாக்கிறது” என்றாள்.
அவளை ஆழமாய் நோக்கிய அவன் “மன்னிச்சிடு” என்றான்.
“சரி சரி” என்றாள் சமாதானமாய்.

“அண்ணா தன்னுடைய நண்பன் வீட்ட போகேக்க எறிகணைகள் வந்து விழுந்திருக்கு, பாதுகாப்புக்காக சென்பீற்றர்ஸ் தேவாலயத்துக்குள்ள போயிருக்கிறான். அந்த நேரம் அந்த தேவாலயத்தில நடந்த விமானத்தாக்குதல் நிறைய பிஞ்சுகளைப் பலி எடுத்திட்டுது. அதில என்ர அண்ணாவும் ஒருத்தன்",
"இளமையின் கதவுகளை எட்டிப்பிடிக்கத் துடித்த பருவத்தில், எத்தனையோ கனவுகளுடனும் கற்பனைகளுடனும் வளர்த்த தன் ஒரே மகனை இரத்த வெள்ளத்தில் பார்த்த கணமே அம்மாவின்ர மனம் பேதலிச்சுப்போச்சு, “கரிகாலா” இதுதான் அம்மா கடைசியா பேசின வார்த்தை, அதுக்குப்பிறகு அம்மா பேசவே இல்லை. மௌனமா இருந்த அம்மா மௌனமாவே இறந்திட்டா”

“அம்மா எப்பிடி இறந்தாங்க?” அவன் கேட்க,
“அது கடுமையான யுத்தகாலம், வேற வழியில்லாம யாழ் மக்கள் கட்டாயம் இடம்பெயரவேண்டிய நிலை. நாங்கள் எங்கட ஊரைவிட்டு வேற ஊருக்குப்போற நிலைமை வந்தது, கையில கிடைச்ச பொருட்களை எடுத்துக்கொண்டு மக்களோட மக்களா நாங்களும் ஓடினம். ஐஞ்சுலட்சம் மக்கள் பயணம் செய்த பாதையில மாறிமாறி எறிகணைவீச்சு உக்கிரமா விழுந்தது. அதில ஒரு எறிகணைச்சிதறல் அம்மாவின்ர காலில பட்டிட்டுது, அந்த இடத்திலயே அம்மா கீழ விழுந்திட்டா, அப்பா, கையில பைகள் வைச்சிருந்ததால அம்மாவை என்ர கையில பிடிச்சுத் தந்தவர், அம்மான்ர காலெல்லாம் ரத்தமா ஓடினதைப் பாத்ததும் நான் அவான்ர கையை விட்டிட்டன், சனமெல்லாம் அம்மாவை மிதிச்சுக்கொண்டு ஓடிச்சினம், நான், அம்மா----அம்மா --- எண்டு கத்தினன். அப்பாவும், தேன்மொழி--------தேன்மொழி ---எண்டு கத்தினார். ஆனா அம்மா வாயே திறக்கேல்ல, அவ்வளவு சனநெரிசலில் ஒண்டுமே செய்ய முடியேல்ல, அழுதுகொண்டே வந்திட்டம், அம்மா, அப்பிடியே இறந்திட்டா, அந்த—அந்த, கோர நினைவை இப்ப நினைச்சாலும் என்ர உடம்பெல்லாம் நடுங்குது” தவிப்போடு பெரிய பெரிய மூச்சுகளை எடுத்து தன்னை ஆசுவாசப்படுத்தியவள், “அம்மா சாவுக்கு நான்தான் காரணமோன்னுகூட நினைக்கத்தோணுதுடா” எனக்கூறி மௌனமானபோதும் அவள் அழவில்லை. ‘இருந்தாலும் இவ்வளவு வைராக்கியம் ஒரு பொண்ணுக்கு கூடாது’ என மனதிற்குள் நினைத்தபடியே
“ சீச்சீ, ஏன் அப்பிடிச் சொல்லுறாய், நீ சின்னப்பெண், உன்னால எப்பிடி அவவை காப்பாற்றிக் கொண்டுபோகமுடியும், அப்புறம் என்னாச்சு?” பரிதவிப்போடு கேட்டான்.

“பிறகென்ன, அப்பிடியே கிளிநொச்சிக்கு போனம், வறுமை, வியாதி எல்லாம் சேர்ந்து வதைச்சிது, எவ்வளவு வலி, தாங்கிக்கொண்டன், அம்மா அடிக்கடி சொல்லுவா, அழுகிறது கோழைத்தனம் எண்டு, அதனால் எப்பவுமே கஸ்ரத்தை எனக்குள்ள புதைச்சிடுவன், எனக்காக கொஞ்ச காலம் வாழ்ந்த அப்பா, இன்னொரு துணையை தேடினபோதும், சித்தி என்னுடைய பதிவை தனிய பதியச்சொல்லும் போது அப்பா மௌனமா இருக்கேக்கயும் வலிச்சதுதான், ஆனா நான் அழேல்ல, எல்லாக் கஸ்ரத்தையும் மனசுக்குள்ள புதைச்சிட்டன்” என்றாள்.
காங்கேசனுக்கு எல்லாம் இருட்டான மாதிரி இருந்தது. இந்த சின்ன வயசில இவளுக்குள் இவ்வளவு சோகமா, ‘அவளது தனிப்பதிவின் அனுதாபம் தான், முகாம் நிர்வாகத்தினர் மூலமான அவளது படிப்பு’ என எண்ணியதும் காங்கேசனின் மனம் வலித்தது.

ஆலமரத்தின் மேலிருந்து குருவிகள் கீச்சிட்டன. உணர்வின்றி அமர்ந்திருந்தான் காங்கேசன்.
“என்ர கதையைச் சொல்லி உன்னை கலவரப்படுத்திட்டனா, சரி சரி ---வா போகலாம்” என்றபடி எழுந்துகொண்டவள், காங்கேசனின் பொய்க்கோபம் கலந்த பார்வையைக் கண்டதும்
“சரிடா ----விடு –“ என்றாள் புன்னகையோடு.
“உன்னட்ட சொன்னது ஏதோ பெரிய பாரம் குறைஞ்ச மாதிரி இருக்குடா” என்றவளை நேராகப் பார்த்து
“நீ கெட்டிக்காரி சாதனா” என்றான்.

நாட்கள் நகர்ந்தன, இப்போதெல்லாம் சாதனா காங்கேசனின் வீட்டிற்கு அடிக்கடி செல்வதுண்டு, பெண்மகவு இல்லாத காங்கேசனின் அப்பா அம்மாவிற்கு அவள் மீது அலாதியான பிரியம். அவளது தந்தைகூட அவளது நட்பை நன்கு புரிந்துகொண்டிருந்தார். சித்தி மட்டும் ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பார், அவ்வேளைகளில் அவள் அந்த இடத்திலேயே நிற்கமாட்டாள். காங்கேசனை யாராவது ஏதாவது சொன்னால் அவள் கேட்டுக் கொண்டிருக்கமாட்டாள் என்பது காங்கேசனுக்கும் நன்றாகவே தெரியும்.
கல்லூரியின் கடைசிப் பரீட்சையில் அவள் அதிக புள்ளிகளைப்பெற்று பள்ளிக்கும் முகாமிற்கும், பெற்றவருக்கும் பெருமைதேடித் தந்திருந்தாள். அவளைப் பாராட்டாதவர்களே இல்லை, அவள் சிரித்தே பார்த்திராத காங்கேசன், புன்னகை பூசியிருந்த அவளது வதனம் கண்டு குதூகலம் அடைந்தான். அதே குதூகலிப்பில் அவளது கரம் பற்றி “ வாழ்த்துக்கள்” எனக்கூறிவிட்டான்.

சட்டென் கரங்களைப் பறித்துக்கொண்ட அவள்,
“சரி நான் போட்டுவாறன்” என்றுவிட்டு வீட்டிற்குச் சென்றுவிட்டாள். அதன் பின்னர் அவள் வைத்தியத்துறையையும் அவன் பொறியியல் துறையையும் தெரிவுசெய்து கொண்டனர். ஆனால் அந்தச் சின்ன விசயம் மட்டும் காங்கேசனின் மனதைவிட்டு மறையவே இல்லை.
எப்போதாவது காணும் போது தன்னுடைய இலட்சியம் பற்றி அடிக்கடி அவனிடம் கூறுவாள். அவள் விழிவிரித்து கூறும் அனைத்தையும் கேட்டு பிரமித்துப் போவான் அவன். கல்பனா சவ்லா, மேரிகியூரி, வொலன்ரினா தெரஸ்கோவா இப்படி எல்லோரையும் சாதனா என்னும் பெண் உருவில் கண்டுகொள்வான் காங்கேசன்.

தொடரும்

கோபிகை
இணைஆசிரியா்
ஒளிஅரசி



கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.