அப்பல்லோவில் ஜெ. உணவுச் செலவு 1.17 கோடியா?

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதாவின்
உணவுக்காக 1.17 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாக அப்பல்லோ நிர்வாகம் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயலலிதா மரண மர்மம் தொடர்பாக உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது. இன்று நடைபெற்ற விசாரணையில் முன்னாள் அமைச்சர் பொன்னையன், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.
இதற்கிடையே ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டுமென அப்பல்லோ நிர்வாகத்திற்கு விசாரணை ஆணையம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி விசாரணை ஆணையத்தில் இன்று (டிசம்பர் 18) ஜெயலலிதா சிகிச்சைக்கு ஆன செலவுகளை அப்பல்லோ நிர்வாகம் அறிக்கையாக தாக்கல் செய்துள்ளது. அதில், ஜெயலலிதாவுக்கு ஆன சிகிச்சை செலவு மொத்தம் 6.85 கோடி ரூபாய் என்று குறிப்பிட்டுள்ளது.
அவ்வறிக்கையில், “ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அறையின் வாடகைக்கு 1 கோடியே 24 லட்சத்து 79 ஆயிரம் ரூபாயும், உணவு மற்றும் குடிநீர் செலவாக 1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரம் ரூபாயும், எஞ்சினீயரிங் சர்வீஸுக்காக 30லட்சத்து 68 ஆயிரம் ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளது. கன்சல்டேஷன், உபகரணங்கள் மற்றும் இதர செலவுகளுக்கு 1 கோடியே 92 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பீலேவுக்கு 92 லட்சத்து 7 ஆயிரத்து 844 ரூபாயும், பிசியோதெரபி சிகிச்சைக்காக சிங்கப்பூர் மவுண்ட் எலிசபெத் மருத்துவமனைக்கு 1 கோடியே 29 லட்சத்து 9 ஆயிரத்து 319 ரூபாயும் கட்டணமாக அளிக்கப்பட்டுள்ளதாகவும் அப்பல்லோ நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
75 நாட்கள் ஜெயலலிதா சிகிச்சை பெற்றதற்கான மொத்த செலவு 6 கோடியே 85 லட்சத்து 69 ஆயிரத்து 584 ரூபாய் என்று குறிப்பிட்டுள்ள அப்பல்லோ அதில், “41 லட்சத்து 13 ஆயிரத்து 304 ரூபாய் காசோலையாக அக்டோபர் 13, 2016 அன்று வழங்கப்பட்டது என்றும், ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஜூன் 15, 2017 அன்று அதிமுக சார்பாக 6 கோடி ரூபாய் காசோலையாக வழங்கப்பட்டது என்றும், மொத்தமாக 6 கோடியே 41 லட்சத்து 13 ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது, மேலும், 44 லட்சத்து 56 ஆயிரத்து 280 ரூபாய் கட்டண பாக்கி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உணவு செலவு மட்டும் 1.17 கோடி ரூபாய் என்று அப்பல்லோ குறிப்பிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என்று ஊடகங்களில் அதிமுகவினர் பேட்டியளித்த நிலையில், இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம் என்று அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருந்தார். இந்த நிலையில் 75 நாட்களும் ஜெயலலிதா உணவாக இட்லியை சாப்பிட்டிருந்தால்கூட இவ்வளவு செலவாக வாய்ப்பில்லையே என்று சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
இருப்பினும், ஜெயலலிதாவின் உணவுக்கு ஆன தொகை மட்டுமல்லாமல் அவரை பார்க்க வருகை தந்தவர்கள், அமைச்சர்கள், அதிமுக நிர்வாகிகளின் உணவுச் செலவையும் கணக்கிட்டு அந்த அறிக்கையில் அப்பல்லோ தெரிவித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.